சோமாலிய ஹோட்டல் மீது போராளிகள் தாக்கியதில் 26 பேர் மரணம்

சோமாலிய ஹோட்டல் மீது போராளிகள் தாக்கியதில் 26 பேர் மரணம்

1 mins read
bf6c70b0-5060-4f27-8e0a-487bc7732461
சோமாலியாவில் உள்ள பிரபல ஹோட்டல் மீது போராளிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். 56 பேர் காயம் அடைந்தனர். படம்: ஏஎஃப்பி -

மொகாடிஷு: சோமாலியாவில் உள்ள ஒரு பிரபல ஹோட்டல் மீது போராளிகள் நடத்திய தற்கொலைத் தாக்குதல் மற்றும் வெடிகுண்டு தாக்குதலில் வெளிநாட்டினர் உட்பட குறைந்தது 26 பேர் உயிரிழந்ததாக உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

இறந்தவர்களில் 9 பேர் வெளிநாட்டினர். கென்ய நாட்டவர் மூவர், கனடா நாட்டவர் ஒருவர், பிரிட்டிஷ்காரர் ஒருவர், ஓர் அமெரிக்கர் ஆகியோர் இறந்தவர்களில் அடங்குவர். தாக்குதலில் சீனாவைச் சேர்ந்த இருவர் காயம் அடைந்ததாக அந்த அதிகாரி கூறினார்.

இந்த தாக்குதலுக்கு அல்கொய்தாவுடன் தொடர்புடைய அல்-ஷபாப் இயக்கம் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளது. சோமாலியாவின் தெற்கு பகுதியில் கிஸ்மாயோ நகரில் உள்ள பிரபல மெடினா ஹோட்டலுக்குள் வெடிகுண்டு நிரப்பப்பட்ட ஒரு வாகனத்தை ஓட்டிவந்த தற்கொலைப் படையைச் சேர்ந்த போராளி அந்த வாகனத்தை வெடிக்கச் செய்ததில் பலர் உயிரிழந்ததாக உள்ளூர் அதிகாரி ஒருவர் கூறினார். பின்னர் பாதுகாப்புப் படையினர் அந்த ஹோட்டலை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தினர்.

தாக்குதலில் ஈடுபட்ட பல போராளிகளில் சிலரை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றதாக தகவல்கள் கூறுகின்றன.

சோமாலிய அரசாங்கத்தை கவிழ்க்க அல்-ஷபாப் இயக்கம் 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயுத தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறது.