ஹாங்காங் போலிசாருடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் மோதல்

ஹாங்காங் போலிசாருடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் மோதல்

2 mins read
37ce54a0-4f6b-48dd-b47a-8ee68f181500
ஹாங்காங்கில் சர்ச்சைக்குரிய  மசோதாவை ரத்து செய்யக் கோரி ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் மீண்டும் ஊர்வலமாகச் சென்றனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் பலர் கறுப்பு நிற உடை உடுத்தியிருந்தனர். நேற்று காலை அமைதியாக நடந்த  மற்றொரு ஊர்வலத்தில் செய்தியாளர்களும் கலந்துகொண்டனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

ஹாங்காங்: ஹாங்காங்கில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் போலிசாருக்கும் இடையில் மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஹாங்காங்கில் நியூ டெரிட்டரிஸ் பகுதியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் நேற்று ஊர்வலமாகச் சென்றனர்.

அமைதியாகத் தொடங்கிய ஊர்வலம் அமைதியாகவே முடிந்தது என்ற போதிலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலர் அந்த இடத்தை விட்டுச் செல்லவில்லை.

இதனால் கூட்டத்தினரைக் கலைக்க அவர்கள் மீது போலிசார் மிளகுத் தூள் கலந்த நீரை தெளித்ததால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்ததாக தகவல்கள் கூறின.

ஹாங்காங்கில் சர்ச்சைக்குரிய மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் நேற்று ஊர்வலமாகச் சென்றனர். 'நியூ டெரிட்டரிஸ்' பகுதியில் உள்ள ஷா டின் நகரில் நேற்று பிற்பகல் 3 மணியளவில் ஒன்றுதிரண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து ஊர்வலத்தைத் தொடங்கினர்.

இதற்கு முதல் நாள் நடந்த பேரணியின்போது ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் போலிசாருக்கும் இடையில் மோதல் ஏற்பட்ட போதிலும் அதையும் பொருட்படுத்தாது மீண்டும் ஆர்ப்பாட்டக்காரர்கள் நேற்றும் மாபெரும் ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.

சி குங் கோவிலுக்கு வெளியில் ஒன்றுகூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள் நியூடவுன் பிளாசாவில் உள்ள பேரங்காடி நிலையத்திற்கு அருகில் உள்ள ஷா டின் பேருந்து முனையத்தை நோக்கி ஊர்வலமாகச் சென்றனர். சுமார் 1.6 கிலோ மீட்டர் தொலைவு வரையிலான ஊர்வலம் அது. நேற்றைய கடும் வெயிலையும் பொருட்படுத்தாது குடும்பத்தினர் பலர் ் தங்கள் இளம் பிள்ளைகளுடன் கலந்துகொண்டனர். முதியவர்களும் நேற்றைய ஊர்வலத்தில் கலந்துகொண்டதாகக் கூறப்பட்டது.

ஊர்வலம் அமைதியாக நடைபெறுவதை உறுதிப்படுத்த தொண்டூழியர் குழு ஒன்றை அமைத்திருப்பதாக ஏற்பாட்டாளர்களில் ஒருவர் கூறினார். போலிசார் தலையிடமால் இருந்தால் இந்த ஊர்வலம் திட்டமிட்டபடி அமைதியாக நடைபெறும் என்றும் அவர் சொன்னார். நேற்றைய ஊர்வலத்தில் கலந்துகொள்ளுமாறு ஹாங்காங் மக்களுக்கு சென்ற வாரமே ஆர்ப்பாட்டக்காரர்கள் அழைப்பு விடுத்திருந்தனர். போலிசார் அடையாளம் கண்டுகொள்ளாமல் இருக்க அனைவரும் கறுப்பு நிற உடையை உடுத்தி வருமாறு மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது போலிசார் வன்முறையைக் கையாளக்கூடாது என்பதை வலியறுத்தும் வகையில் நேற்று காலை செய்தியாளர்கள் அமைதியாக நடந்த ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.

ஹாங்காங்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை சீனாவுக்கு நாடு கடத்தி அவர்களை விசாரணைக்கு உட்படுத்தும் மசோதாவுக்கு ஹாங்காங் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த மசோதாவை ரத்து செய்ய வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.