வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவை புண்படுத்தும் நோக்கத்தில் தற்போதைய அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் ஈரானுடனான அணுசக்தி உடன்பாட்டிலிருந்து விலகினார் என்ற தகவல் தற்போது கசிந்துள்ளது.
அமெரிக்காவுக்கான முன்னாள் பிரிட்டிஷ் தூதர் சர் கிம் டரோச் எழுதிய குறிப்பிலிருந்து இத்தகவல் கசிந்துள்ளது.
அந்தக் குறிப்பில் திரு ஒபாமாவை வேண்டுமென்றே சினமடையச் செய்யும் வகையில் ஈரானுடனான உடன்பாட்டை திரு டிரம்ப் கைவிட்டார் என சர் கிம் குறிப்பிட்டுள்ளார். திரு டிரம்ப்பின் இந்த நடவடிக்கை 'ராஜதந்திர நாசவேலை' என்றும் சர் கிம் டரோச் விமர்சனம் செய்துள்ளார்.
இந்தக் குறிப்பு 2018ம் ஆண்டு எழுதப்பட்டுள்ளது. அதாவது அப்போது பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சராக இருந்த போரிஸ் ஜான்சன் ஈரானுடன் அனைத்துலக நாடுகள் செய்துகொண்ட உடன்பாட்டிலிருந்து விலக வேண்டாம் என அமெரிக்காவை கேட்டுக்கொண்ட பின்னர் சர் கிம் டரோச் அந்தக் குறிப்பை எழுதி இருக்கிறார்.
அந்தக் குறிப்பில் இடம்பெற்றுள்ள தகவல் தற்போது வெளியில் கசிந்துள்ளதாக பிரிட்டிஷ் நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

