ஜகார்த்தா: இந்தோனீசியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள மலுக்கு தீவுப் பகுதியை நேற்று 7.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உலுக்கியதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தின்போது பல வீடுகளும் கட்டடங்களும் ஆட்டம் கண்டதால் பீதியடைந்த மக்கள் அலறியடித்துக்கொண்டு வெளியில் ஓடிவந்ததாகவும் அவர்கள் தெருக்களிலும் திறந்த வெளியிலும் தஞ்சம் அடைந்ததாகவும் அதிகாரி ஒருவர் கூறினார்.
மலுக்கு தீவுக்கு வடக்கு பகுதியில் உள்ள டெர்னேட் என்ற நகருக்கு தென்மேற்கில் சுமார் 165 கிலோமீட்டர் தொலைவில் பூமிக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் உருவானதாக ஆய்வு மையம் குறிப்பிட்டது. இந்த நிலநடுக்கத்தின் விளைவாக ஏற்பட்ட சேத விவரங்கள் பற்றிய உடனடித் தகவல் எதுவும் வெளியாகவில்லை.
நேற்று உலுக்கிய நிலநடுக்கம் சக்தி வாய்ந்தது என்ற போதிலும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்று உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
மலுக்கு தீவுப் பகுதியில் சென்ற வாரமும் 6.9 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் அந்த நிலநடுக்கத்தால் சேதம் ஏற்படவில்லை என்றும் அதிகாரிகள் கூறினர்.
இதற்கிடையே ஆஸ்திரேலியா வின் புரூம் நகருக்கு மேற்கே சுமார் 210 கிலோ மீட்டர் தொலைவில் நேற்று காலை 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தின்போது சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று கூறப்பட்டது.

