மலேசியா: ஹஸிக் உட்பட அறுவர் கைது

மலேசியா: ஹஸிக் உட்பட அறுவர் கைது

2 mins read

மலேசிய பொருளியல் விவகார அமைச்சர் அஸ்மின் அலி இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் பாலியல் காணொளி சர்ச்சை தொடர்பில் பிகேஆர் கட்சியின் முன்னாள் இளையர் பிரிவுத் தலைவர் ஹஸிக் அஸிஸ் உட்பட அறுவரை போலிஸ் கைது செய்துள்ளது.

நேற்று முன்தினம் இரவு கைதான அந்த அறுவரையும் ஆறு நாட்கள் விசாரணைக் காவலில் வைக்க கோலாலம்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆடவர் இருவர் ஓரினப் புணர்ச்சியில் ஈடுபடுவது போன்ற காணொளி கடந்த மாதம் சமூக ஊடகங்களில் பரவியது. அவற்றில் இருப்பது அமைச்சர் அஸ்மின் அலியும் தானும்தான் என்று துணை அமைச்சர் ஒருவரின் முதன்மை அந்தரங்கச் செயலாளராக இருந்த ஹஸிக் அஸிஸ் பகிரங்கமாகக் கூறினார்.

இதையடுத்து, அந்தப் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.

ஆயினும், அந்தக் காணொளியில் இருப்பது தான் இல்லை என்று அமைச்சர் அஸ்மின் அலி தொடர்ந்து மறுத்து வருகிறார். தனக்கு எதிராக கட்சிக்குள்ளேயே சதி நடந்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இருந்தபோதும், தம் மீதான புகார் குறித்த விசாரணை முடியும் வரையில் அஸ்மின் அலி அமைச்சர் பதவியில் இருந்து விலகி இருக்கவேண்டும் என்று பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிமின் ஆதரவாளர்கள் சிலர் வலியுறுத்

தினர்.

முன்னதாக, வேண்டுமென்றே அக்காணொளியை 'வாட்ஸ்அப்' செயலி மூலம் பிகேஆர் கட்சியினரிடமும் செய்தியாளர்களிடமும் பரப்பிய சதிக் கும்பலை நெருங்கிவிட்டதாக கடந்த சனிக்கிழமையன்று மலேசிய போலிஸ் தலைவர் அப்துல் ஹமீத் படோர் தெரிவித்திருந்தார்.

"ஆய்வகச் சோதனை முடிவுகளுக்குப் பின்னரே அந்தக் காணொளியின் உண்மைத்தன்மை தெரியவரும்," என்றார் அவர்.

சரவாக்கின் சந்துபோங் பகுதிக்கான பிகேஆர் கட்சியின் இளையர் பிரிவுத் தலைவராக இருந்த ஹஸிக், கடந்த மாதம் 14ஆம் தேதி கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் மணிலாவுக்குத் தப்பிச் செல்ல முயன்றபோது தடுத்து நிறுத்தப்பட்டார்.

இந்த விவகாரம் குறித்து விசாரிப்பதற்காக போலிஸ் கடந்த வாரம் திரு ஹுஸிர் தலைமையில் சிறப்புப் பணிக்குழு ஒன்றை அமைத்தது.

இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பில் மேலும் பலர் கைது செய்யப்படுவார்களா என்று கேட்டதற்கு, அது விசாரணையைப் பொறுத்தே அமையும் என்று திரு ஹுஸிர் பதிலளித்தார்.