இந்தியருக்காக புதிய கட்சி தொடங்கினார் வேதமூர்த்தி

இந்தியருக்காக புதிய கட்சி தொடங்கினார் வேதமூர்த்தி

1 mins read

மலேசியாவில் இந்தியர்களின் நலன்களை மேம்படுத்துவதற்காக ஒரு புதிய கட்சி அமைக்கப்பட்டு உள்ளதாக அந்நாட்டுப் பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேத­மூர்த்தி அறிவித்துள்ளார்.

மலேசிய முன்னேற்றக் கட்சி (எம்ஏபி) நேற்று அதிகாரபூர்வமாக பதிவு செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

"மலேசிய முன்னேற்றக் கட்சி (எம்ஏபி) சங்கப் பதிவகத்தில் அதிகாரபூர்வமாகப் பதிவு செய்யப்­பட்டுவிட்டதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்", என்று அறிக்கை ஒன்றில் அவர் கூறினார்.

இக்கட்சி மலேசியாவில் இந்தி­யர்களின் அரசியல், பொருளியல், கல்வி, கலாசார, சமய, சமூக நலன்களைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் சமுதாயத்தை முன்னுக்குக் கொண்டுசெல்லவும் பாடுபடும்", என்று திரு வேத­மூர்த்தி சொன்னார்.

"ஒரு மக்கள் இயக்கமாக, பக்கத்தான் ஹரப்பான் அரசாங்­கத்தின் கீழ் நம்பிக்கைகள் மற்றும் வாய்ப்புகளை மீட்டெடுப்பதில் இந்தக் கட்சி முக்கிய பங்கு வகிக்கும்," என்றார் அவர்.

புதிய கட்சியை வழிநடத்த, ஹிண்ட்ராஃப் அமைப்பின் தலைவர் பதவியிலிருந்து தாம் விலகுவதாக திரு வேதமூர்த்தி அறிவித்தார்.

விரைவில் சிறப்புப் பொதுக் கூட்டம் ஒன்றை நடத்தி அதன் மூலமாக அவ்வமைப்பிற்குப் புதிய தலைவர் நியமிக்கப்படுவார் என்றும் அவர் கூறினார்.