போக்குவரத்துக்கு முழுவதுமாகத் திறந்துவிடப்பட்ட பாகிஸ்தான் ஆகாயவெளி

போக்குவரத்துக்கு முழுவதுமாகத் திறந்துவிடப்பட்ட பாகிஸ்தான் ஆகாயவெளி

1 mins read

இஸ்லாமாபாத்: இந்திய எல்லையில் ராணுவப் பதற்றம் அதிகரித்ததன் காரணமாக ஐந்து மாதங்களுக்கு முன்பு மூடப்பட்ட பாகிஸ்தான் ஆகாயவெளி நேற்று முதல் மீண்டும் பயன்பாட்டுக்குத் திறந்துவிடப்பட்டுள்ளது. ஆசியாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையேயான முக்கியமான ஆகாயத் தடம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த பிப்ரவரி மாதத்தில் இந்திய ஆகாயப்படை பயங்கரவாதக் குழுக்களை அழிக்கும் முயற்சியில் வான்வெளித் தாக்குதலை நடத்தியதாக அறிவித்ததையடுத்து இந்த வான்வெளித் தடத்தை பாகிஸ்தான் மூடியது.

அந்தத் தடத்தின் ஒரு பகுதி ஏற்கெனவே திறக்கப்பட்ட நிலையில், மேற்கத்திய நாடுகளிலிருந்து இந்தியா, ஐரோப்பாவிலிருந்து தெற்காசிய நாடுகள் ஆகியவற்றுக்குச் செல்லும் விமானங்கள் மாற்றுப் பாதையில் செல்ல வேண்டியிருந்தது. இதனால் நூற்றுக்கணக்கான வர்த்தக, கார்கோ விமானங்கள் தினமும் கட்டுப்பாடுகளைச் சந்தித்தன.

பயணிகளின் பயண நேரம் அதிகரித்ததுடன் விமானங்களை இயக்கும் நிறுவனங்கள் கூடுதல் எரிபொருளைப் பயன்படுத்த வேண்டியிருந்தது.

அனுமதிக்கப்பட்ட தடங்களில் அனைத்து விதமான விமானப் போக்குவரத்துக்கு பாகிஸ்தானின் ஆகாயவெளி திறந்துவிடப்படுவதாக பாகிஸ்தான் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் இணையப்பக்கத்தில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இதனை அடுத்து இரு நாடுகளின் ஆகாயவெளியிலும் கட்டுப்பாடுகள் ஏதுமில்லை என்று இந்தியா தெரிவித்தது.

ஆகாயவெளி மூடப்பட்டிருந்த காலகட்டத்தில் $271 மில்லியன் கூடுதலாக எரிபொருளுக்காகச் செலவானது என்று கணக்கிடப்பட்டுள்ளது. புதுடெல்லிக்குச் சென்று வரும் விமானங்களில் 1.8 மில்லியன் பயணிகள் பாதிக்கப்பட்டதாகவும் சுமார் 370 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கூடுதலாகச் செலவானதாகவும் கூறப்படுகிறது.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், குவான்டாஸ் ஏர்வேஸ், யுனைடெட் ஏர்லைன்ஸ் போன்றவையும் தங்களது விமானங்களின் தடத்தை மாற்ற வேண்டியிருந்தது.