கோலாலம்பூர்: மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்குக்குச் சொந்தமான கடன் பற்று அட்டைகளிலிருந்து இத்தாலியில் உள்ள ஆடம்பர நகைக்கடை ஒன்றில் ஒரே நாளில் $1.09 மில்லியன் செலவிடப்பட்டதாக நீதிமன்றத்தில் நேற்று தெரிவிக்கப்பட்டது. திரு நஜிப்புக்குச் சொந்தமான இரண்டு கடன்பற்று அட்டைகளிலிருந்து இத்தாலியில் உள்ள சுவிஸ் நகைக்கடையான டி கிரிசோகோனோவில் 3.3 மில்லியன் மலேசிய ரிங்கிட் 2014ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8ஆம் தேதி செலவிடப்பட்டதாக ஏம்பேங்க் எனும் மலேசிய வங்கியின் மூத்த அலுவலர் இயோ எங் லியோங் நேற்று முன்தினம் தெரிவித்ததாக
பெர்னாமா செய்தி வெளியிட்டது. ஹவாய்யில் உள்ள சேனல் புட்டிக், பேங்காக்கில் உள்ள ஷங்ரிலா ஹோட்டல் ஆகியவற்றில் முறையே 460,000 ரிங்கிட் மற்றும் 120,000 ரிங்கிட் தொகைக்கும் மேல் இந்த கடன்பற்று அட்டைகள் மூலம் செலவு செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது.
விசாரணை கோரும் ஐஸ்லாந்துடனான உறவை முறிக்க பிலிப்பீன்ஸ் எண்ணம்
மணிலா: பிலிப்பீன்சில் போதைப்பொருளுக்கு எதிரான போர் தொடர்பாக கொல்லப்பட்டவர்கள் பற்றி விசாரணை நடத்த வேண்டுமென ஐக்கிய நாடுகள் சபையிடம் ஐஸ்லாந்து கோரியிருப்பதையடுத்து அந்த நாட்டுடனான உறவுகளை முறித்துக்கொள்வது குறித்து பிலிப்பீன்ஸ் நாட்டு அதிபர் ரோட்ரிகோ டுட்டர்ட்டே தீவிரமாக ஆலோசித்து வருவதாக அவரது பேச்சாளர் கூறியுள்ளார். அந்த விசாரணையை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் மன்றம் ஆதரித்ததை அடுத்து இந்த அறிக்கை வெளியாகியுள்ளது. 2016ஆம் ஆண்டு போதைப்
பொருள் தொடர்பான குற்றங்களின் மீது கடும் நடவடிக்கையை அதிபர் டுட்டர்ட்டே தொடங்கினார். அதன் தொடர்பில் 5,300 பேர் கொல்லப்பட்டிருப்பதாக போலிஸ் தரப்பில் கூறப்பட்டாலும் உண்மையான எண்ணிக்கை இதைவிட நான்கு மடங்கு என மனித உரிமைக் குழுக்கள் குறிப்பிடுகின்றன.
சட்டவிரோத மீன்பிடிப்பு: இன்டர்போல் தேடிய கப்பலைப் பிடித்த இந்தோனீசியா
ஜகார்த்தா: பனாமா நாட்டு கொடியைத் தாங்கிய கப்பல் ஒன்றை இந்தோனீசியா பிடித்து வைத்துள்ளது. சட்டவிரோத மீன்பிடிப்பின் தொடர்பில் இன்டர்போல் அமைப்பு அந்தக் கப்பலைத் தேடியதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர். அதிலிருந்த 18 ரஷ்யர்கள், 10 இந்தோனீசியர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

