அமெரிக்க சபையில் கண்டனத் தீர்மானம்

அமெரிக்க சபையில் கண்டனத் தீர்மானம்

2 mins read

வாஷிங்டன்: அமெரிக்காவில் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த நான்கு நாடாளுமன்ற பெண் உறுப்பினர்களுக்கு எதிராக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் இனவாத கருத்துகளை டுவிட்டரில் வெளியிட்டதன் தொடர்பாக, அவர் மீது கண்டனம் தெரிவிக்கும் வகையில் அந்நாட்டின் பிரதிநிதிகள் சபை வாக்களித்துள்ளது.

"புதிய இளம் அமெரிக்கர்களிடம் தங்கள் நிறம் குறித்த அச்சத்தை டிரம்ப்பின் இந்த கருத்துகள் அதிகரித்துள்ளன என்று அதிபருக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

ஜனநாயக கட்சி அதிகாரத்தில் உள்ள இந்தப் பிரதிநிதிகள் சபை அதிபர் டிரம்ப்புக்கு எதிராக நிறைவேற்றிய தீர்மானத்துக்கு ஆதரவாக 240 வாக்குகளும் அதற்கு எதிராக 187 வாக்குகளும் கிடைத்தன.

ஆனால், இந்த நான்கு பெண்களும் அமெரிக்காவைவிட்டு வெளியேற அறைகூவல் விடுத்த டிரம்ப் மீண்டும் தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளார்.

''எனது உடலில் இனவெறிக்கு ஆதரவான ரத்தம் பாயவில்லை,'' என்று அவர் குறிப்பிட்டார்.

டிரம்ப்புக்கு எதிராக பிரதிநிதிகள் சபையின் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்த ஜனநாயக கட்சியினரோடு நான்கு குடியரசு கட்சி உறுப்பினர்களும் அந்த சபையின் ஒரே சுயேச்சை உறுப்பினரும் இணைந்து வாக்களித்தது குறிப்பிடத்தக்கது.

இதே வேளையில் திங்கள்கிழமை திரு டிரம்ப் டுவிட்டரில் வெளியிட்ட பதிவுகளை புறந்தள்ளிய இந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இது டிரம்ப்பின் திசை திருப்பும் வேலை என்றும் மக்கள் இந்த சமூக வலைத்தளப் பதிவுகளில் கவனம் செலுத்துவதைவிட அதிபரின் கொள்கைகள் குறித்து உன்னிப்பாக கவனிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தனர்.

டிரம்ப்புக்கு எதிராக இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்ட உடனே, அவரை பதவி நீக்க கோரும் தீர்மானம் கொண்டுவர ஜனநாயக கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் அல் கிரீன் ஒரு வேண்டுகோளை முன்வைத்தார்.

ஆனால் அவருக்கு ஆதரவாக இதே கட்சியைச் சேர்ந்த மற்ற உறுப்பினர்கள் தொடர்ந்து ஆதரவு தந்த நிலையிலும் இந்த வேண்டுகோளை ஜனநாயக கட்சியின் தலைமை ஏற்றுக்கொள்ளவில்லை.

"அமெரிக்கா அமெரிக்க மக்களுக்கே" என்ற கொள்கையை தொடர்ந்து கடைப்பிடித்து வரும் டிரம்ப், இதனால் பிற நாடுகளில் பிறந்து அமெரிக்காவில் குடியுரிமை பெற்றவர்கள் மீது இனவெறி கருத்துகளைப் பேசி வருகிறார் என்ற குற்றச்சாட்டு அவர் மீது தொடர்ந்து வைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.