2008ஆம் ஆண்டு மும்பை குண்டுவெடிப்பில் மூளையாகச் செயல்பட்ட ஹஃபீஸ் கைது

2008ஆம் ஆண்டு மும்பை குண்டுவெடிப்பில் மூளையாகச் செயல்பட்ட ஹஃபீஸ் கைது

1 mins read

புதுடெல்லி: மும்பை குண்டுவெடிப்பில் மூளையாகச் செயல்பட்ட பாகிஸ்தானிய பயங்கரவாதி ஹஃபீஸ் சையது கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாகிஸ்தானின் லாகூரில் நேற்று காலை கைது செய்யப்பட்ட ஜமாத் உத் தவா அமைப்பின் தலைவர் ஹஃபீஸ் நீதிமன்ற தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். ஹஃபீஸ் சையது கைதான தகவலை பாகிஸ்தான் ஊடகங்கள் வெளியிட்டதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் தலைவரான ஹஃபீஸ் மீது பாகிஸ்தானில் 23 பயங்கரவாத வழக்குகள் உள்ளன. மேலும், 2008ஆம் ஆண்டு மும்பை பயங்கரவாத தாக்குதல்களில் அவர் முக்கிய மூளையாகச் செயல்பட்டவர் ஆவார்.

ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அமெரிக்கா போன்றவை ஜமாத் உத் தவா தீவிரவாத அமைப்பு என்று ஏற்கெனவே பிரகடனம் செய்திருக்கின்றன. ஜமாத் உத் தாவா அமைப்பின் சார்பில் பாகிஸ்தானில் 300க்கும் மேற்பட்ட சமயப் பள்ளிகள், மருத்துவமனைகள், ஆம்புலன்ஸ் சேவை நடத்தப்படுகின்றன.

இந்தியாவின் தொடர் நெருக்குதலால் தீவிரவாத இயக்கங்கள் மீது நடவடிக்கை எடுக்க பாகிஸ்தானுக்கு உலக நாடுகளின் வலியுறுத்தல் அதிகரித்து.

இதையடுத்து சுதந்திரமாக நடமாடிக்கொண்டிருந்த ஹஃபீஸ் மற்றும் அவரது பங்காளிகள் மீது 23 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

அதில் தீவிரவாதிகளுக்கு நிதி திரட்டியது, பண மோசடி போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.