பெருவின் முன்னாள் அதிபர் அமெரிக்காவில் கைது

பெருவின் முன்னாள் அதிபர் அமெரிக்காவில் கைது

1 mins read

வாஷிங்டன்: ஊழல் வழக்கில் கைது நடவடிக்கைக்கு அஞ்சி அமெரிக்காவுக்கு தப்பியோடிய பெரு நாட்டு முன்னாள் அதிபர் அலெஜாண்ட்ரோ டொலிடோ அமெரிக்க போலிசாரால் கைது செய்யப்பட்டார்.

2001 முதல் 2006ஆம் ஆண்டு வரை, பெரு அதிபராக இருந்த அலெஜாண்ட்ரோ டொலிடோ மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருந்தன.

குறிப்பாக, பெருவுடன் பிரேசிலை இணைக்கும் நெடுஞ்சாலைக்கான அரசு ஒப்பந்தப் பணிகளை வழங்கியதில், பிரேசில் கட்டுமான நிறுவனத்திடம் 20 மில்லியன் டாலர் அவர் லஞ்சம் பெற்றதாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கில் அலெஜாண்ட்ரோவை முக்கிய குற்றவாளியாகக் குறிப்பிட்டு போலிசார் தேடி வந்த நிலையில், அவர் அமெரிக்காவுக்கு தப்பி ஓடினார்.

இதனை அறிந்த பெரு அரசு, அலெஜாண்ட்ரோவை உடனடியாக நாடுகடத்தும்படி அமெரிக்காவிடம் முறையிட்டது. அதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் பயனாக, நேற்று அமெரிக்க போலிசார் அலெஜாண்ட்ரோவை கைது செய்தனர். தற்போது அவரை பெருவுக்கு நாடு கடத்தும் முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளன.