வாஷிங்டன்: உலகளவில் சராசரியாக 10 பேரில் ஒருவர் உணவின்றி பசியோடு இருப்பதாக ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் 82 கோடி மக்கள் உணவின்றி இருப்பதாகவும் இது உலகின் மொத்த மக்கள் தொகையில் 10.7 விழுக்காடு என்றும் கூறப்பட்டுள்ளது. 2017ஆம் ஆண்டு 81 கோடியே 10 லட்சம் பேராக இருந்த இந்த எண்ணிக்கை மூன்றாவது ஆண்டாக தொடர்ந்து அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் இந்தியாவில் மட்டும் சத்தான உணவு இல்லாமல் 19 கோடியே 44 லட்சம் பேர் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் உலகம் முழுவதும் 130 கோடி மக்களுக்கு பாதுகாப்பான, சத்தான, போதுமான உணவு கிடைப்பதில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
சத்தான உணவு கிடைக்காததால் ஐந்து வயதுக்கு உட்பட்ட 21.9 விழுக்காடு குழந்தைகளின் வளர்ச்சி பாதிக்கப்படுவதாகவும் பொருளாதாரத் தேக்க நிலை, போர், இயற்கை சீற்றங்கள் உள்ளிட்டவற்றால் சத்தான உணவு கிடைப்பதில் பின்னடைவு ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

