'பிகேஆர் கட்சியில் விரிசல் ஏற்பட்டுள்ளது'

'பிகேஆர் கட்சியில் விரிசல் ஏற்பட்டுள்ளது'

2 mins read

மலேசியாவின் பிகேஆர் கட்சியில் விரிசல் ஏற்பட்டிருப்பது உண்மைதான் என்று அதன் துணைத் தலைவர் ஸுரைடா கமாருதீன் ஒத்துக்கொண்டுள்ளார்.

இதையடுத்து, கருத்து வேற்றுமைகளை மறந்து கட்சியினர் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று திருவாட்டி ஸுரைடா கேட்டுக்கொண்டுள்ளார்.

''பிகேஆர் தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, கட்சியை வலுப்படுத்த இதுவே தருணம் என நான் கருதுகிறேன். சாக்கடை அரசியலைப் புறக்கணித்து, சதிகாரர்களைக் கண்டறிய வேண்டும். கட்சியினர் ஒன்றுபட வேண்டும். அதைச் செய்ய கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிமுக்கு இதுவே சரியான நேரம்,'' என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

"தம் மீது தொடுக்கப்பட்ட விமர்சனத்தை திரு அன்வார் ஏற்றுக்கொண்டார் என்பதே உண்மை. ஆகையால், இதிலிருந்து விடுபட்டு ஒரு நல்ல முடிவு எட்டப்படும் என்று நம்புகிறேன்," என்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது திருவாட்டி ஸுரைடா கூறினார்.

சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட பாலியல் காணொளியில் இருக்கும் இருவரில் ஒருவர் அஸ்மின் அலி என்பது உறுதி செய்யப்பட்டால் அவர் தமது பொருளியல் விவகாரத் துறை அமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று அன்வார் தெரிவித்திருந்தார்.

அவரது இந்தக் கூற்றுக்குக் கண்டனம் தெரிவித்து, திருவாட்டி ஸுரைடா உட்பட பிகேஆர் கட்சியைச் சேர்ந்த 20க்கு மேற்பட்ட தலைவர்கள் நேற்றுக் காலையில் கூட்டறிக்கை வெளியிட்டனர்.

அன்வாரின் கூற்று பொருத்தமற்றது என்றும் அனுமானத்தின் அடிப்படையிலானது என்றும் அந்தத் தலைவர்கள் தெரிவித்தனர்.

அத்துடன், கட்சித் தலைவராக இருக்கும் திரு அன்வார், கட்சியின் ஒற்றுமையைக் கருதி திரு அஸ்மின் அலியின் பக்கம் நின்றிருக்க வேண்டும் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

இந்தச் சூழலில், ஒன்றாக அமர்ந்து கலந்து பேசி இத்தகைய கருத்து வேறுபாடுகளை களைய வேண்டும் என்று திருவாட்டி ஸுரைடா வலியுறுத்தி இருக்கிறார்.

''நாங்கள் எங்களது கருத்தைத் தெரிவித்துவிட்டோம். அடுத்து என்ன செய்ய விரும்புகிறார் என்பதை திரு அன்வாரிடமே விட்டு

விடுகிறோம்,'' என்றும் அவர் சொன்னார்.