ஜோகூரின் பாசிர் கூடாங் வட்டாரத்தில் அதிக நச்சுவாயு கொண்ட மூன்று தொழிற்சாலைகளை மலேசிய அதிகாரிகள் அடையாளப்படுத்தியுள்ளனர்.
மெத்தில் மெர்கப்டன், அக்ரொலின், அக்ரிரோனைட்ரைல் போன்ற வாயுக்களை வெளியாக்குவதாகக் கண்டுபிடிக்கப்பட்ட இந்தத் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதாகச் சுற்றுப்புறப் பிரிவின் தலைமை இயக்குநர் நோர்லின் ஜாஃபர் தெரிவித்தார். அந்த மூன்று தொழிற்சாலைகள் யாவை என்பதையும் அவற்றில் அரசாங்கத்திற்கு உரிமை உள்ளதா இல்லையா என்பதையும் பற்றி கூற திருவாட்டி நோர்லின் மறுத்துள்ளார்.
முப்பதுக்கும் அதிகமான பள்ளிகளைச் சேர்ந்த 100 மாணவர்களுக்கும் மேலானோருக்கு மயக்கம், குமட்டல் போன்ற அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து பாசிர் கூடாங்கிலுள்ள கிட்டத்தட்ட 475 கல்வி நிலையங்கள் ஜூன் மாதத்தில் மூன்று நாட்களுக்கு மூடப்பட்டன. இது பாசிர் கூடாங்கில் நடந்த முதல் தூய்மைக்கேட்டுச் சம்பவம் அல்ல. மார்ச் மாதத்தில் சுங்கை கிம் கிம் ஆற்றில் நச்சுப் பொருட்கள் வீசப்பட்ட சம்பவத்தால் 5,800க்கும் அதிகமானோர் மருத்துவ உதவியை நாட வேண்டியிருந்தது. சில மாதங்களுக்குப் பிறகு மீண்டும் இத்தகைய சம்பவம் நிகழ்ந்ததற்கு மாநில அதிகாரிகளையும் மத்திய அரசு அதிகாரிகளையும் ஜோகூர் சுல்தான் குறைகூறியுள்ளார்.

