மலேசிய முன்னாள் பேரரசர், ரஷ்ய முன்னாள் அழகி தம்பதியின் விவாகரத்தை உறுதிசெய்த சிங்கப்பூர் வழக்கறிஞர்

மலேசியாவின் முன்னாள் பேரரசர் ஐந்தாம் சுல்தான் முகம்மது, ரஷ்யாவைச் சேர்ந்த அவரது மனைவி ரிஹானா ஒக்சானாவிடம் மூன்று முறை ‘தலாக்’ கூறி இரண்டு முஸ்லிம் சாட்சிகள் முன்னிலையில் அவரைக் கடந்த மாதம் விவாகரத்து செய்துவிட்டதாக சுல்தானைப் பிரதிநிதிக்கும் சிங்கப்பூர் வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கிளந்தான் மாநில சுல்தான் முகம்மது கடந்த மாதம் 22ஆம் தேதி செய்த விவாகரத்து ஷரியா சட்டத்துக்கு உட்பட்டு இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இத்தம்பதியின் விவாகரத்துக்கு கிளந்தான் ஷரியா நீதிமன்றம் அனுமதி வழங்கியதாகவும்  இம்மாதம் 1ஆம் தேதி அது விவாகரத்துச் சான்றிதழை வழங்கியதாகவும் சுல்தானைப் பிரதிநிதிக்கும் வழக்கறிஞர் கோ தியேன் ஹுவா கூறினார். மற்றொரு வழக்கறிஞர் யூ மின் ஜூவுடன் சேர்ந்து அவர் சுல்தானைப் பிரதிநிதித்தார்.

‘‘ரஷ்யாவைச் சேர்ந்த அலெக்சாண்டர் டோபுரோவின்ஸ்கி & பார்ட்னர்ஸ் சட்ட நிறுவனத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் ஜூன் 22ஆம் தேதி விவாகரத்து குறித்து திருமதி ரிஹானாவிடம் தெரிவித்தனர். விவாகரத்துச் சான்றிதழின் பிரதி ஒன்று அவரிடம் வழங்கப்பட்டது,’’ என்று எவர்ஷெட்ஸ் ஹேரி இலாயஸ் சட்ட நிறுவனத்தைச் சேர்ந்த திரு கோ குறிப்பிட்டார்.

முன்னாள் பேரரசர்-ரிஹானா தம்பதி விவாகரத்து செய்துகொண்டதாக அண்மையில் வெளியான செய்திகளை மறுத்திருந்த ரிஹானா, சுல்தான் முகம்மது உடனான தமது திருமண வாழ்க்கை முடிவுக்கு வரவில்லை என்று கூறியிருந்தார். அவர் வெளியிட்ட இந்தக் கருத்தைத் தொடர்ந்து சிங்கப்பூர் வழக்கறிஞர் இந்த அறிக்கை வெளிவந்துள்ளது.

‘‘விவாகரத்து குறித்து எனக்கு எந்தவொரு தகவலும் வழங்கப்படவில்லை. எனது குழந்தையுடன் நான் ரஷ்யாவில் உள்ளேன். விவாகரத்து செய்ய நாங்கள் கடந்த மாதம் சிங்கப்பூர் செல்லவில்லை,’’ என்று மலேசியகினி செய்தி நிறுவனத்திடம் ரிஹானா கூறியதாக முன்னதாக செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

சுல்தான் முகம்மது, 49, உடன் தாம் கொண்டிருந்த நெருக்கமான உறவு குறித்து முன்னதாக ரிஹானா, 27, தமது இன்ஸ்டகிராம் பக்கத்தில் காணொளி வெளியிட்டிருந்தார். இத்தம்பதிக்கு இரண்டு மாத ஆண் குழந்தை இருப்பது குறிப்பிடத்தக்கது.