அன்வார் இப்ராகிம்: அஸ்மினுடன் இணைந்து பணியாற்றத் தயார்

அன்வார் இப்ராகிம்: அஸ்மினுடன் இணைந்து பணியாற்றத் தயார்

2 mins read
136285f9-686b-4625-b1a2-3736e26d34c6
பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் அஸ்மின் அலியுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக அக்கட்சியின் தலைவர் அன்வர் இப்ராகிம் கூறியுள்ளார். கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கோலாலம்பூர்: பிகேஆர் கட்சியின் ஓய்வுத் தளச் சந்திப்பு நிகழ்ச்சியில் கட்சியின் தலைவர் என்ற முறையில் பெரும் ஆதரவைப் பெற்றுள்ள திரு அன்வார் இப்ராகிம், கட்சியின் துணைத் தலைவர் அஸ்மின் அலியுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக நேற்று தெரிவித்தார்.

அந்தக் கட்சியின் தலைவராக இருந்து வழிநடத்த 140ல் 120 பேர் திரு அன்வாருக்கு ஆதரவளித்த தீர்மானமும் மூன்று நாள் ஓய்வுத் தளச் சந்திப்பு நிகழ்ச்சியில் நிறைவேற்றப்பட்டது.

மலேசிய அரசியலில் பெரும் புயலைக் கிளப்பிய ஓரினப் புணர்ச்சி காணொளி வெளியானதையடுத்து பிகேஆர் கட்சியில் திரு அன்வாரின் ஆதரவாளர்களுக்கும் திரு அஸ்மின் அலியின் ஆதரவாளர்களுக்கும் இடையேயான உட்கட்சிப் பூசல் வலுத்தது.

அந்தக் காணொளியில் இருப்பது அஸ்மின் அலிதான் என்பது நிரூபிக்கப்பட்டால் அவர் தமது பதவியில் விருந்து விலக வேண்டும் என்று திரு அன்வார் முன்பு குறிப்பிட்டிருந்தார்.

காணொளியில் இருப்பவர்கள் யார் என்பதை முக அடையாளத்தை வைத்துக் கண்டுபிடிக்க இயலவில்லை என்ற மலேசிய போலிஸ் உயர் அதிகாரியின் அறிக்கையைத் தொடர்ந்து, அந்தக் காணொளியில் திரு அஸ்மின் அலி சம்பந்தப்படவில்லை என்பதை ஏற்றுக்கொள்வதாக திரு அன்வார் குறிப்பிட்டார்.

சாக்கடை அரசியலை வன்மையாகக் கண்டிப்பதால் போலிசார் தங்களது விசாரணையை முடிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

"திரு அன்வாரின் முழு அறிக்கையையும் பார்த்த பிறகு, போலிசாரின் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டதை அவர் ஒப்புக்கொண்டதை நான் ஏற்றுக்கொள்கிறேன்," என்று திரு அஸ்மின் நேற்று முன்தினம் டுவிட்டரில் பதிவிட்டார்.

மேலும், அந்தக் காணொளியைப் பரப்பியதில் பிகேஆர் உறுப்பினர்களுக்குத் தொடர்பிருந்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் திரு அஸ்மின் தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கிடையே, திரு அன்வாருடன் இணைந்து கட்சிப் பிரச்சினைகளைத் தீர்க்க முன்வர வேண்டுமென பிகேஆர் கட்சித் தலைவர்களுக்கு சாபா பிகேஆர் தலைவர் கிரிஸ்டினா லியூ கேட்டுக்கொண்டார்.