இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள டேரா இஸ்மாயில் கான் நகரில் நேற்று போராளிகள் நடத்திய இரட்டைத் தாக்குதலில் குறைந்தது 9 பேர் உயிரிழந்ததாகவும் 30க்கும் அதிகமானோர் காயம் அடைந்ததாகவும் போலிசார் கூறினர்.
தற்கொலைப் படையைச் சேர்ந்த ஒரு பெண் போராளி பாகிஸ்தானில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு வெளியில் ஆணிகளைக் கொண்ட வெடிமருந்துகளை வெடிக்கச் செய்தததில் நான்கு போலிஸ்காரர்கள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர்.
அதற்கு முன்னதாக மோட்டார் சைக்கிள்களில் வந்த துப்பாக்கிக் காரர்கள் குடியிருப்புப் பகுதியில் போலிஸ்காரர்களை நோக்கி சுட்டதில் இரு போலிஸ்காரர்கள் உயிரிழந்தனர் என்றும் பலர் காயம் அடைந்தனர் என்றும் போலிஸ் உயர் அதிகாரி சலீம் கான் கூறினார்.
காயம் அடைந்தவர்களை மருத்துவமனைக்குள் கொண்டு சென்ற நேரத்தில் நுழைவாயிலில் போராளிகள் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டனர்.
அவ்விரு தாக்குதல்களுக்கும் பாகிஸ்தான் தலிபான் குழு பொறுப்பேற்றுக்கொண்டுள்ளது.
ஆனால் மருத்துவமனைத் தாக்குதலில் ஈடுபட்டது ஒரு பெண் போராளி என்பதை தலிபான் குழு ஒப்புக்கொள்ளவில்லை. காயம் அடைந்தவர்களில் 8 பேர் போலிஸ்காரர்கள் என்றும் சிலருக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் போலிஸ் அதிகாரி சலீம் கான் கூறினார்.
மருத்துவமனைக்கு வெளியே தற்கொலைத் தாக்குதலில் ஈடுபட்ட ஒரு பெண், ஆணிகளைக் கொண்ட 7 கிலோ கிராம் வெடிமருந்துகளை வெடிக்கச் செய்ததாக உள்ளூர் தடயவியல் நிபுணர் ஒருவர் கூறியுள்ளார்.
அத்தாக்குதலில் அந்த மருத்துவமனையின் அவசர அறை சேதம் அடைந்ததாகவும் இதனால் அந்த அறையைத் தற்காலிகமாக மூடியிருப்பதாகவும் மருத்துவமனை உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார். பாகிஸ்தானில் கிட்டதட்ட 20 ஆண்டுகளாக தலிபான் போராளிகள் போலிசாரையும் பாதுகாப்புப் படையினரையும் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
தலிபான் போராளிகள் மற்றும் இதர போராளிகள் பதுங்கியிருக்கக்கூடிய இடங்களில் பாகிஸ்தான் ராணுவம் அண்மைய ஆண்டுகளில் தாக்குதல் நடத்தி வந்துள்ளது. தற்போது வன்முறைச் சம்பவங்கள் குறைந்த போதிலும் தலிபான் போராளிகள் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருவதாகவும் அதிகாரிகள் கூறினர்.

