தோக்கியோ: மேற்கு ஜப்பானில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மண்சரிவும் வெள்ளப்பெருக்கும் ஏற்படக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
அத்துடன் சுகோகு வட்டாரப் பகுதியில் ஆறுகளில் நீர்மட்டம் அதிகரித்து ஆற்றுநீர் பெருக்கெடுத்து ஓடக்கூடும் என்றும் ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதனால் பாதுகாப்பு கருதி ஆயிரக்கணக்கான மக்களை வெளியேறுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
குறிப்பாக ஃபுகுவோகா மற்றும் ஹிரோஷிமா பகுதியில் வசிப்பவர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
டோசு மற்றும் குரூம் நகரங்களில் நேற்று 12 மணி நேரத்திற்குள் சுமார் 300மிமி அளவு மழை பெய்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
சுகோகு வட்டாரத்தில் டானாஸ் எனும் சூறாவளிக் காற்று மணிக்கு 30 கிலோ மீட்டர் வேகத்தில் வீசுவதாகவும் அதிகபட்சமாக இந்த சூறாவளி மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும் ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
ஓராண்டுக்கு முன்பு ஜப்பானின் மேற்குப் பகுதியில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கிலும் நிலச்சரிவிலும் சிக்கி 220க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். பல வீடுகள் நாசமாகின.

