தொடர்ந்து சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்களில் ஏழாவது வாரமாக நேற்றும் ஆயிரக் கணக்கானோர் கலந்துகொண்டனர். காலவரையறையின்றி தடை செய்யப்பட்டுள்ள 'நாடு கடத்தல்' மசோதாவை மீட்டுக்கொள்ளுமாறு ஹாங்காங் மக்கள் போராடி வருகின்றனர்.
நேற்று ஆர்ப்பாட்டக்காரர்களின் கோபம் சாய் யிங் புன்னில் உள்ள சீன அரசாங்கத் தொடர்பு அலுவலகத்தின் மீது திரும்பியது. அந்த அலுவலகக் கட்டடத்தைக் கறுப்பு நிற சாயத்தால் சேதப்படுத்தியதுடன் அதன் சின்னம், கண்காணிப்பு கேமரா போன்றவற்றையும் சேதப்படுத்தினர். முட்டைகளையும் வீசினர். அவர்களை போலிசார் பின்தொடர்ந்ததாகக் கூறப்பட்டது.
நேற்று பிற்பகல் விக்டோரியா பார்க்கில் கூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள் வான் சாய், அரசாங்கக் கட்டடங்கள் இருக்கும் அட்மிரல்டி பகுதிவரை அமைதியாகப் பேரணி நடத்தினர். நகரின் முக்கிய வீதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததுடன் அரசாங்கக் கட்டடங்களைச் சுற்றி தண்ணீர் நிரப்பப்பட்ட பிளாஸ்டிக் தடுப்புகள் வைக்கப்பட்டிருந்தன.
ஹாங்காங்கில் அரசாங்கம் இல்லை என்று சிலர் கோபத்துடன் கூறினர். சிலர் வாரம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்துவது பற்றிப் பேசினர்.

