சீன எல்லையை ஒட்டியுள்ள ஹாங்காங் புறநகர்ப் பகுதியில் இருக்கும் ரயில் நிலையமொன்றில் முகமூடிக் கும்பல் ஒன்று திடீரெனத் தாக்குதல் நடத்தியதில் செய்தியாளர்கள் உட்பட 40க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர்.
வெள்ளைச் சட்டை அணிந்திருந்த அந்த முகமூடிக் கும்பல், நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் யுவென் லோங் ரயில் நிலையத்தினுள் புகுந்தது. அந்தக் கும்பல், கறுப்புச் சட்டை அணிந்தவர்களை எல்லாம் கண்மூடித்தனமாகத் தாக்கியது. கறுப்புச் சட்டைக்காரர்கள், நாடுகடத்தல் சட்டத்தை எதிர்த்துப் போராடி வருபவர்கள் என நம்பப்படுகிறது.
தாக்குதல் குறித்த காணொளி இணையத்தில் உலா வருகிறது. அதில், முகமூடிக் கும்பல், கண்ணில்பட்ட கறுப்புச்சட்டைக்காரர்களை விரட்டி விரட்டித் தாக்குவதைக் காண முடிந்தது. கறுப்புச்சட்டைக்காரர்கள் குடைகளைக் கொண்டும் தீயணைப்புச் சாதனங்களைக் கொண்டும் அந்தத் தாக்குதலில் இருந்து தங்களைக் காத்துக்கொள்ள முயன்றனர்.
அத்துடன் நில்லாமல், ரயில் நிலையத்தில் நின்றிருந்த ஒரு ரயிலுக்குள்ளும் புகுந்த முகமூடிக் கும்பல், அதிலிருந்த பயணிகளையும் விட்டுவைக்கவில்லை. இந்தத் தாக்குதல் சம்பவங்களில் பலருக்கு ரத்தக் காயங்கள் ஏற்பட்டன.
காயமடைந்தவர்களுள் அரசியல்வாதியான லாம் சியூக் டிங்கும் ஒருவர். உதவிக்காக அழைப்பு விடுத்தும் ஒரு மணி நேரம் கழித்தே போலிசார் அங்கு வந்ததாகக் கொதிப்புடன் கூறினார் திரு லாம்.
தாக்குதல்காரர்களில் உள்ளூர்காரர்களும் தெற்காசியர்கள் போன்று தோற்றமளித்தவர்களும் இருந்ததாகக் கூறிய அவர், அவர்கள் 20 முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் குறிப்பிட்டார்.
சம்பவ இடத்தைவிட்டு போலிசார் சென்றபிறகு, நள்ளிரவில் மீண்டும் அந்த ரயில் நிலையத்திற்குச் சென்ற முகமூடிக் கும்பல், மூடியிருந்த ரயில் நிலையக் கதவுகளை வலுக்கட்டாயமாகத் திறந்து, திரும்பவும் தங்களது வெறியாட்டத்தைத் தொடங்கினர்.
தொடர்ந்து இரவு 1 மணியளவில் கலவரத் தடுப்பு போலிசார் அங்கு சென்றபோது, கைகளில் உலோகத் தடிகளுடன் வெள்ளைச் சட்டைக்காரர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டிருந்ததைக் காண முடிந்தது.
மூன்று மணி நேரத்திற்குப் பிறகு, அவர்களில் பலரைப் பிடித்து விசாரித்த கலவரத் தடுப்பு போலிசார், அவர்களிடமிருந்த உலோகத் தடிகளைப் பறிமுதல் செய்தனர். ஆனாலும், ஒருவர்கூட கைது செய்யப்படவில்லை.
முன்னதாக, நேற்று முன்தினம் பகலில் ஹாங்காங்கில் உள்ள சீனாவின் முதன்மைப் பிரதிநிதி அலுவலகத்தைப் போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டு, நாடு கடத்தல் சட்டத்திற்குத் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர். அப்போது, வண்ணத் தெளிப்பான்களைக் கொண்டு சுவர்களில் கிறுக்கிய அவர்கள், அந்தக் கட்டடத்தின்மீது முட்டைகளையும் வீசி எறிந்தனர்; அங்கிருந்த தேசிய சின்னம் ஒன்றையும் சேதப்படுத்தினர்.
கடும் கண்டனம்
இதனிடையே, சீனாவின் முதன்மைப் பிரதிநிதி அலுவலகம் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியதை ஹாங்காங் தலைமை நிர்வாகி கேரி லாம் வன்மையாகக் கண்டித்துள்ளார்.
அந்த அலுவலகத்தைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தியது தேசிய இறையாண்மைக்கு விடுக்கப்பட்ட சவால் என்று திருவாட்டி லாம் குறிப்பிட்டார்.
அத்துடன், ரயில் நிலையத்தில் பொதுமக்களையும் போராட்டக்காரர்களையும் குறிவைத்து நடத்தப் பட்ட தாக்குதல்கள் குறித்தும் அதிர்ச்சி தெரிவித்த அவர், அதுபற்றி அதிகாரிகள் முழுமையாக விசாரணை நடத்துவர் என்றும் அறிவித்தார். குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடிக்கும்படி போலிஸ் ஆணையருக்கும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

