தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அமெரிக்காவுக்கு உளவு பார்த்த ஈரானியர்கள் 17 பேர் கைது

2 mins read

அமெரிக்காவின் மத்திய உளவுத் துறையை (சிஐஏ) சேர்ந்த 17 பேர் ஈரானிடம் பிடிபட்டுள்ளதாகவும் அவர்களுள் சிலருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பதாகவும் ஈரான் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சிஐஏவுக்காக உளவு பார்த்த ஒரு கும்பலைச் சேர்ந்தவர்கள் எனக் கூறி 17 பேரைக் கைது செய்துள்ளதாக ஈரான் உளவு அமைச்சைச் சுட்டி, அந்நாட்டு அரசாங்கத் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. அவர்கள் அனைவரும் ஈரானியர்கள் என

'தி கார்டியன்' செய்தி கூறியது.

பிடிபட்டுள்ளவர்களுள் சிலருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இவ்வாண்டு மே மாதம் முதல் தேதியன்று அமெரிக்கா, ஈரான் மீது கடுமையான பொருளியல் தடைகளை விதித்தது. இதையடுத்து, கடந்த மூன்று மாதங்களாகவே ஈரானுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையே கடும் மோதல் போக்கு நீடித்து வருகிறது.

இம்மாதம் 4ஆம் தேதி ஜிப்ரால்டர் கடலோரப் பகுதியில் ஈரானியக் கப்பல் ஒன்றை பிரிட்டன் கடற்படை சிறை பிடித்தது. இதற்குப் பதிலடி தரும் விதமாக, கடந்த வாரம் ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் பிரிட்டன் கப்பல் ஒன்றை ஈரான் சிறைபிடித்தது.

"பொருளியல், அணுவாயுதம், உள்கட்டமைப்பு, ராணுவம் உள்ளிட்ட துறைகளின் முக்கிய மையங்களில் அந்தச் சந்தேகப் பேர்வழிகள் பணியாற்றி வந்தனர். அங்கிருந்தபடி அவர்கள் ரகசியத் தகவல்களைச் சேகரித்தனர்," என்று தொலைக்காட்சியில் வாசிக்கப்பட்ட ஈரான் உளவு அமைச்சின் அறிக்கை கூறியது.

முன்னதாக, சிஐஏவால் இயக்கப்பட்டு வந்த பெரிய அளவிலான இணைய உளவுக் கும்பலை அம்பலப்படுத்தியதாகவும் அதன் விளைவாக பல்வேறு நாடுகளில் அமெரிக்க உளவாளிகள் கைதுசெய்யப்பட்டு விட்டதாகவும் சென்ற மாதம் ஈரான் கூறியிருந்தது. அதற்கும் அண்மைய கைது நடவடிக்கைகளுக்கும் தொடர்பு உள்ளதா என்பது பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

இதனிடையே, ஈரானின் கைது அறிவிப்பை நிராகரித்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பொம்பியோ, பொய் சொல்வதில் ஈரான் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.