அஸ்மின் அலி: சதியின் பின்னணியில் இருப்பவரை அறிவேன்

அஸ்மின் அலி: சதியின் பின்னணியில் இருப்பவரை அறிவேன்

2 mins read
21ffeca1-663e-4cf8-97f1-723b8b5abfd3
வீண் சண்டையைத் தவிர்க்கும்படியும் சாக்கடை அரசியலைப் புறந்தள்ளுமாறும் பிகேஆர் கட்சித் தலைமையை மலேசிய பொருளியல் விவகாரத் துறை அமைச்சர் அஸ்மின் அலி கேட்டுக்கொண்டுள்ளார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

தம்மைத் தொடர்புபடுத்தி, பாலியல் காணொளி ஒன்றை சமூக ஊடகங்களில் பரவவிட்டதற்கு யார் காரணம் என்பது தமக்குத் தெரியும் என்று மலேசிய பொருளியல் விவகாரத் துறை அமைச்சர் அஸ்மின் அலி தெரிவித்துள்ளார்.

ஆயினும், அந்த விவகாரம் குறித்து இன்னும் போலிஸ் விசாரித்து வருவதால் அவர் யார் என்பதைத் தாம் வெளியிட முடியாது என்று திரு அஸ்மின் மறுத்துவிட்டார்.

"அவர் யார் என்பதை என்னால் இப்போது சொல்ல முடியாது. அதன் தொடர்பில் இன்னும் விசாரணை நடந்து வருகிறது. விசாரணை முடியும் வரை காத்திருப்போம்," என்று அவர் கூறினார்.

"ஆனாலும், காணொளி வெளியான நாளில் இருந்தே இது உட்கட்சி சதியாகத்தான் இருக்கும் என நான் சந்தேகப்பட்டேன்," என்று செய்தியாளர்களிடம் அவர் சொன்னார்.

பிரதமர் மகாதீர் முகம்மதுக்கு விசுவாசமாக இருப்பேன் என திரு அஸ்மின் உறுதியளித்தார்.

அதே நேரத்தில், தம்மைப் பதவியிலிருந்து அகற்ற விரும்புவோரை எச்சரிக்கும் விதமாக, தமது விசுவாசத்திற்கு ஓர் எல்லை உண்டு என்றும் அவர் குறிப்பிட்டார்.

பிகேஆர் கட்சியின் துணைத் தலைவரான திரு அஸ்மின், கட்சியின் நலனுக்காக தலைவர் அன்வார் இப்ராஹிமுக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு அளிப்பேன் என்றும் குறிப்பிட்டார்.

சர்ச்சைக்குரிய பாலியல் காணொளி தொடர்பில் அண்மைக்காலமாக இருவரும் மாறி மாறி வார்த்தைகளை அள்ளி வீசியபோதும் திரு அன்வாருடன் இணைந்து பணியாற்ற மறுப்பதற்கு எந்தக் காரணமும் இல்லை என்றார் திரு அஸ்மின்.

"திரு அன்வாரும் நானும் தொடர்ந்து இணைந்து செயல்படுவோம். ஏனெனில், அவர் கட்சியின் தலைவர்; நான் துணைத் தலைவர். நானும் அவரும் பல பத்தாண்டுகளாக ஒன்றாகக் கட்சிப் பணியாற்றி வருகிறோம். அப்படி இருக்கையில், எங்களுக்கு இடையே சிண்டு முடியப் பார்க்காதீர்கள்," என்று ஊடகங்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார்.

முன்னதாக, சர்ச்சையைக் கிளப்பிய பாலியல் காணொளி உண்மையானது என்றாலும் அதில் இடம்பெற்றுள்ள ஆடவர் இருவரும் யார் என்பதைத் துல்லியமாகக் கண்டறிய முடியவில்லை என்று போலிஸ் தலைவர் அப்துல் ஹமீத் படோர் தெரிவித்திருந்தார்.

இதனிடையே, வீண் சண்டையைத் தவிர்க்கும்படியும் சாக்கடை அரசியலைப் புறந்தள்ளுமாறும் பிகேஆர் கட்சித் தலைமையை திரு அஸ்மின் வலியுறுத்தியுள்ளார்.

"நாம் சண்டையிட்டுக்கொள்வதற்காக மக்கள் பக்கத்தான் ஹரப்பானுக்கு வாக்களிக்கவில்லை. இதுபோன்ற விவகாரங்களால் மக்கள் சோர்வடைந்துவிட்டனர். சாக்கடை அரசியலை நாம் புறந்தள்ள வேண்டும். சரியான தகவல்களைப் பரப்புவதில் ஊடகங்கள் எங்களுடன் இணைந்து செயல்பட வேண்டும்," என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.