ஜோகூர் பாரு: மலேசியாவின் ஜோகூர் மாநில, பாசிர் கூடாங் பகுதியில் வேகமாகச் சென்றுகொண்டிருக்கும் டொயோட்டா காரின் பின் பகுதியில் படுத்திருந்தவாறு இரு சிறுவர்கள் 'சூப்பர்மேன்' பாணியில் சாகசம் புரிந்ததன் தொடர்பில் 49 வயது ஆடவர் ஒருவரை ஜோகூர் போலிசார் கைது செய்துள்ளனர்.
பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவலின் உதவியுடன் பாசிர் கூடாங்கின் தாமான் நுசா டமாய் எனும் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நேற்று முன்தினம் அந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக போலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைதான அந்த ஆடவர் காரை ஓட்டியவர் என போலிஸ் சந்தேகிக்கிறது.
அச்சிறுவர்கள் சாகசம் புரிய பயன்படுத்தப்பட்ட இந்த கார் பறிமுதல் செய்யப்பட்டதாக சுப்பிரின்டெண்டன்ட் இஸ்மாயில் டொல்லா கூறினார். இந்த சாகச நடவடிக்கையில் ஈடுபட்ட அந்த மூன்று சிறுவர்களும் 10க்கும் 12 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என அவர் சொன்னார்.
சாலையில் பிறரது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் இந்தக் கண்மூடித்தனமான செயல் குறித்து விசாரணை நடத்த அந்த சந்தேக நபர் விசாரணைக் காவலில் வைக்கப்படுவார் என்று போலிஸ் தெரிவித்தது.

