நியூயார்க்: அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளைக் கடும் வெப்பம் வாட்டி வரும் நிலையில், நியூயார்க் நகரில் மட்டும் 50,000க்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் மின்சாரமின்றி அவதியுறுகின்றனர். குறிப்பாக, கிழக்கு அமெரிக்காவை கடந்த மூன்று நாட்களாக வெப்பம் வாட்டி வருகிறது.
இதனால் நியூயார்க் மக்கள் வெளியே செல்ல முடியாமல் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்கின்றனர். வீட்டில் இருக்கும் குளிர்சாதன வசதியை அவர்கள் பயன்படுத்தி வந்தனர்.
ஆனால், இப்போது ஏற்பட்டுள்ள மின்தடையால் வெப்பத்திலிருந்து விடுதலை கிடைக்காமல் அப்பகுதி மக்கள் அவதிக்கு ஆளாகினர்.
நியூயார்க் நகருக்கு மின்சாரம் வழங்கும் நிறுவனமான 'கன்சாலிடேட்டட் எடிசன்', கடும் வெப்பத்தின் காரணமாக மின்சார விநியோகத்தில் தடை ஏற்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டது. இன்னும் பெரிய அளவிலான மின்தடையைத் தவிர்க்க தேவையான பழுதுபார்ப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அது விளக்கியது.
அமெரிக்காவின் முக்கிய நகரங்களான நியூயார்க், வாஷிங்டன், கிழக்கு கடற்கரையில் இருக்கும் போஸ்டன் மற்றும் மத்திய மேற்கு பகுதிகளில் வசிக்கும் 200 மில்லியன் மக்கள் வெப்ப அலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
சில இடங்களில் 38 டிகிரி செல்சியஸுக்கு நெருக்கமாகவோ அல்லது அதைவிட அதிகமாகவோ வெப்பம் பதிவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கா மட்டுமின்றி, கனடாவின் சில பகுதிகளும் வெப்ப அலையால் தாக்கப்பட்டுள்ளன.
அண்மைய ஆண்டுகளில், அடிக்கடி நிகழும் வெப்ப அலையை காலநிலை மாற்றத்தோடு வல்லுநர்கள் ஒப்பிடுகின்றனர்.
புதிய தரவுகளின்படி, உலகளவில் பதிவான சராசரி வெப்பநிலை 16.4 டிகிரி செல்சியசாக இருக்கிறது.
மேலும், இந்த ஆண்டின் அதிக வெப்பம் ஜூன் மாதம் பதிவாகி உள்ளது.

