பெட்டாலிங் ஜெயா: மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தின் சிலாங்கூர் ஆற்றில் டீசல் எண்ணெய் மிதந்ததால் சுங்கை சிலாங்கூர் மற்றும் ரந்தாவ் பாஞ்சாங்கில் உள்ள நான்கு தண்ணீர் சுத்திகரிப்பு ஆலைகள் மூடப்பட்டன.
அதன் காரணமாக சிலாங்கூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள 1,133 இடங்களில் தண்ணீர் விநியோகத்தில் மீண்டும் தடை ஏற்பட்டது. அதில் கிட்டத்தட்ட 1.2 மில்லியன் வாடிக்கையாளர்கள் பாதிப்படைந்துள்ளனர்.
எனினும், அதிகாரிகளின் துரித நடவடிக்கையால் நேற்று முன்தினம் 94 விழுக்காட்டுப் பகுதிகளுக்கு நீர் விநியோகம் வழக்கநிலைக்குத் திரும்பியது.
சுங்கை சிலாங்கூர் ஆற்றில் டீசல் கலக்கப்பட்டதற்கு மாநில அரசுக்குச் சொந்தமான மணல் எடுக்கும் தொழிற்சாலை ஒன்றுதான் காரணம் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கும்புலான் செமெஸ்தா எனும் சுரங்க நிறுவனம் அதனை ஒப்புக்கொண்டுள்ளது. விவரம் தெரிந்ததும் அதனைத் தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் நிலைமையைத் தான் அணுக்கமாகக் கண்காணித்து வருவதாகவும் அது குறிப்பிட்டது.
ஆற்றின் மேற்பகுதியில் மணல் எடுக்கும் நடவடிக்கையில் டீசல் வெளியாகி இருப்பதாகவும் இரண்டு நாட்களுக்கிடையில் இரண்டாவது முறையாக நீர் விநியோகத்தில் தடை ஏற்பட்டதில் நாசவேலை எதுவும் இருக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அது பற்றி போலிசிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக சிலாங்கூர் நீர் மேலாண்மை நிறுவனத்தின் தொடர்புத் தலைவர் அப்துல் ராவோப் அகமது தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சுங்கை சிலாங்கூர் ஆற்றின் தூய்மைக்கேட்டிற்கு காரணமானவர்கள் மீது தேசிய நீர் சேவை ஆணையம் (ஸ்பான்) நடவடிக்கை எடுக்கும் என குடிநீர், நிலம் மற்றும் இயற்கை வளத்துறை அமைச்சர் சேவியர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
மற்ற அமலாக்க அமைப்புகளுடன் இணைந்து துர்நாற்றத்திற்கான காரணத்தைக் கண்டறிய ஸ்பான் நடவடிக்கை எடுத்து வருவதை அவர் சுட்டினார்.
ஆறுகளைப் பாதுகாக்கும் நடவடிக்கையில் ஊராட்சி மன்றங்கள் ஈடுபடும்படி டாக்டர் சேவியர் கேட்டுக்கொண்டார்.
''ஆறுகளுக்கு அருகில் இருக்கும் தொழிற்சாலைகள், ஆறுகளில் கழிவுப் பொருட்களைக் கொட்டி அவற்றுக்குத் தூய்மைக்கேட்டை உருவாக்குவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
''ஆறுகளின் தூய்மைக்கேட்டைத் தவிர்ப்பது அனைவரின் கடமையாகும். தூய்மையான நீரைத் தருவது அரசின் கடமை மட்டுமல்ல, அது அனைவரின் கடமையாகும்,'' என டாக்டர் சேவியர் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டார்.

