ரஷ்ய விமானத்தை விரட்டியடித்த தென்கொரியா

ரஷ்ய விமானத்தை விரட்டியடித்த தென்கொரியா

2 mins read

சோல்: தென்கொரிய வான்வெளிக்குள் அத்துமீறி நுழைந்த ரஷ்ய ராணுவ விமானத்தை விரட்டியடிக்கும் வகையில் தென்கொரிய ராணுவம் நூற்றுக்கணக்கான முறை துப்பாக்கிச்சூடு நடத்தியது.

தனது வான்வெளிக்குள் ரஷ்ய ராணுவ விமானம் நேற்று காலை அத்துமீறி நுழைந்ததாக தென்கொரிய தற்காப்பு அமைச்சு தெரிவித்தது. ரஷ்ய ராணுவ விமானம் இவ்வாறு அத்துமீறி நுழைந்திருப்பது இதுவே முதல்முறை என்று தென்கொரிய அதிகாரிகள் கூறினர்.

இந்தச் சம்பவம் நிகழ்வதற்கு முன்பு நேற்று காலை ரஷ்யாவுக்குச் சொந்தமான இரண்டு ராணுவ விமானங்களும் சீனாவுக்குச் சொந்தமான இரண்டு ராணுவ விமானங்களும் தென்கொரிய வான்வெளிக்குள் நுழைந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, இன்னொரு ரஷ்ய ராணுவ விமானம் தென்கொரிய வான்வெளிக்குள் அத்துமீறி நுழைந்தபோது அதை விரட்டியடிக்க தென்கொரியா அதன் எஃப்-15, எஃப்-16 ரக போர் விமானங்களை அனுப்பியது. இந்தப் போர் விமானங்கள் அத்துமீறிய ரஷ்ய ராணுவ விமானத்துக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் 360 முறை துப்பாக்கியால் சுட்டது என்று தென்கொரிய ராணுவ உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பதிலடி தரும் வகையில் ரஷ்ய விமானம் செயல்படவில்லை என்று தென்கொரிய தற்காப்பு அதிகாரிகள் கூறினர். ஆனால் தென்கொரிய வான்வெளியைவிட்டு சென்ற அந்த ரஷ்ய ராணுவ விமானம் 20 நிமிடங்கள் கழித்து மீண்டும் திரும்பியது.

அதைத் தொடர்ந்து தென்கொரிய ராணுவம் கூடுதல் எச்சரிக்கை துப்பாக்கிச்சூடு நடத்தியது.

"இத்தகைய அத்துமீறல்களை நாங்கள் மிகக் கடுமையானதாகக் கருதுகிறோம். இவை தொடர்ந்தால் நாங்கள் கடுமையான நடவடிக்கைகளை எடுப்போம்," என்று தென்கொரியாவின் தலைமைப் பாதுகாப்பு ஆலோசகர் சுங் இயூ யோங் தெரிவித்ததாக தென்கொரிய அதிபர் மாளிகை தெரிவித்தது.

தென்கொரிய வான்வெளிக்குள் தனது ராணுவ விமானங்கள் அத்துமீறவில்லை என்று ரஷ்யா கூறியுள்ளது. அனைத்துலக கடற்

பகுதிக்கு மேல் திட்டமிட்டபடி தனது ராணுவ விமானங்கள் பயிற்சியில் ஈடுபட்டதாக அது கூறியது.

தென்கொரியாவின் குற்றச்சாட்டு தொடர்பில் சீனா உடனடியாக கருத்து தெரிவிக்கவில்லை.