பாசிர் கூடாங்: மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தின் பாசிர் கூடாங்கில் உள்ள ஒரு பள்ளியில் பயிலும் மாணவர்கள் நோய்வாய்ப்பட்டதற்கு பறவை எச்சமும் காரணமாக இருக்கலாம் என்று ஜோகூர் மாநில அரசாங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளாக அந்தப் பள்ளி இப்பிரச்சினையை எதிர்கொண்டு வருவதாகவும் அங்குள்ள சில வகுப்பறைகள் நீண்டகாலமாகப் பயன்பாட்டில் இல்லை என்றும் மாநில சுகாதார, கலாசார, மரபுடைமை குழுத் தலைவர் முகம்மது குஸ்ஸான் அபு பக்கர் தெரிவித்தார்.
"எரிவாயு காரணமாக அப்பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படவில்லை என்று நாங்கள் கூறவில்லை. ஆனால் மாணவர்கள் நோய்வாய்ப்பட்டதற்கு பறவை எச்சமும் காரணமாக இருக்கலாம் என்ற கோணத்தை ஆராய வேண்டி இருக்கிறது. பறவை எச்சத்தால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக மாணவர்களுக்கு மூச்சுத் திணறல், வாந்தி ஏற்பட்டது," என்றார் அவர்.
பள்ளியை அசுத்தப்படுத்தியுள்ள பறவை எச்சத்தைச் சுத்தம் செய்ய கல்வி அமைச்சு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜோகூரின் கல்வி, மனிதவளம், அறிவியல், தொழில்நுட்பக் குழுவின் தலைவர் அமினோல்ஹுடா ஹசான் தெரிவித்தார். அதுமட்டுமல்லாது, உடைந்திருக்கும் கூரையைப் பழுதுபார்க்க வேண்டும் என்றார் அவர். அந்தக் கூரையில்தான் பறவைக் கூடுகள் இருந்ததாக அறியப்படுகிறது. இதற்கிடையே, அனைத்துப் பள்ளிகளின் மூன்றாவது, நான்காவது மாடிகளில் உள்ள வகுப்பறைகள் திறக்கப்பட்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.

