மலேசியாவின் அடுத்த பிரதமராகப் பதவியேற்கக் காத்திருக்கும் அன்வார் இப்ராஹிம்முக்கு எதிராகச் சதி நடந்து வருவதாக அவரது அரசியல் செயலாளர் ஃபர்ஹஷ் முபாரக் தெரிவித்திருக்கிறார். போலிஸ் தடுப்புக் காவலில் எட்டு நாட்களைக் கழித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திரு ஃபர்ஹஷ், தற்போது நடக்கும் ஒரே அரசியல் சதி அன்வாருக்கு எதிரானது என்று தெரிவித்தார்.
"போலிசாருக்கு நம்பகத்தன்மை இருந்தால் அஸ்மின் அலியை விசாரிக்கச் சொல்லுங்கள். அவரை விசாரியுங்கள்." என்றார் திரு ஃபர்ஹஷ்.
"சிறையில் நான் ஒரு வாசகத்தைக் கற்றுக்கொண்டேன். சட்டமே அநீதியாகும்போது சீர்திருத்தம் கடமையாகிறது," என்று திரு ஃபர்ஹஷ் கூறியபோது அவரது ஆதரவாளர்கள் கைத்தட்டினர்.
கடந்த மாதம் பகிரப்பட்ட சில ஓரினப் பாலியல் காணொளிகளுடன் மலேசியாவின் பொருளியல் விவகார அமைச்சர் அஸ்மின் அலி தொடர்புபடுத்தப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து தாமும் பாலியல் காணொளியில் இருந்ததாகக் கூறும் ஹசிக் அசிஸ் என்பவர் ஜூலை மாதம் 14ஆம் தேதி கைது செய்யப்பட்டார். ஜூலை மாதம் 16ஆம் தேதி திரு ஃபர்ஹஷ் தடுத்துவைக்கப்பட்டார்.
காணொளி போலி என்று மலேசிய போலிசார் கடந்த வாரம் உறுதி செய்தனர். ஆனால் மென்பொருள் கருவிகளைப் பயன்படுத்தியபோதும் அதிலுள்ள நபர்களின் அடையாளத்தை உறுதி செய்ய முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தாமும் அஸ்மின் அலியும் பாலியல் செயல்களில் ஈடுபட்டிருந்ததை அந்தக் காணொளிகள் காட்டியதாக ஹசிக் அசிஸ் ஒப்புக்கொண்டார். திரு அஸ்மினோ, இதுவெல்லாம் தனக்கு எதிரான சதி என்று கூறினார்.
ஓரினச் செயலில் திரு அஸ்மின் ஈடுபட்டதாகத் திரு ஃபர்ஹஷ் செய்தியாளர்களிடம் உறுதியாகக் கூறினார். அன்வார் தரப்பிலிருந்து ஒருவர் இப்படி பகிரங்கமாகக் கூறுவது இதுவே முதல்முறை. திரு அன்வாரே பிரதமராக வேண்டும் என்றும் அவர் முழக்கமிட்டார்.

