பெய்ஜிங்: ஹாங்காங்கில் சீனத் துருப்புகள் பொது ஒழுங்கை நிலைநாட்ட முடியும்

பெய்ஜிங்: ஹாங்காங்கில் சீனத் துருப்புகள் பொது ஒழுங்கை நிலைநாட்ட முடியும்

2 mins read

ஹாங்காங் அரசாங்கத்தின் கோரிக்கைக்கேற்ப அந்நகரில் பொது ஒழுங்கை நிலைநிறுத்துவதற்கு அங்கு தளம் கொண்டிருக்கும் சீன ஆயுதப் படை பணியில் முடுக்கிவிடப்படலாம் என சீன ராணுவம் கூறியுள்ளது.

ஹாங்காங்கில் நடைபெற்று வரும் தொடர் ஆர்ப்பாட்டங்களை சீன ராணுவம் அணுக்கமாகக் கண்காணித்து வருவதாக சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் நேற்று நடந்த செய்தியாளர் கூட்டத்தில் ராணுவப் பேச்சாளர் வூ சியான் தெரிவித்தார். குறிப்பாக, ஹாங்காங்கில் உள்ள சீன அரசாங்கத் தொடர்பு அலுவலகத்திற்கு வெளியே கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த வன்முறை வெறியாட்டத்தில் அலுவலகம் மோசமாக சேதப்படுத்தப்பட்டதை அடுத்து பெய்ஜிங்கின் கருத்து வெளிவந்துள்ளது.

''ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலரின் நடத்தை மத்திய அரசின் அதிகாரத்திற்கும் 'ஒரு நாடு, இரு கொள்கைகள்' திட்டத்திற்கும் சவால் விடுக்கும் விதமாக அமைந்துள்ளது. இந்த நிலையை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது,'' என்று மூத்த கர்னல் வூ குறிப்பிட்டார்.

ஹாங்காங் ஆர்ப்பாட்டங்களை சீன ராணுவம் எவ்வாறு கையாளும் என்று கேட்கப்பட்டதற்கு, பொது ஒழுங்கை நிலைநாட்ட ஹாங்காங் அரசாங்கம் மத்திய அரசாங்கத்திடமிருந்து உதவி நாடலாம் என்று அவர் பதிலளித்தார். அந்தக் கோரிக்கைக்கு பெய்ஜிங் ஒப்புதல் அளித்தால், ஹாங்காங்கில் தளம் கொண்டிருக்கும் துருப்புகள் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர குறிப்பிட்ட பணிகளை ஆற்ற முடியும். பணி முடிந்தவுடன் அவை அவற்றின் தளத்திற்குத் திரும்பிவிடும்.

ஹாங்காங் ஆர்ப்பாட்டக்காரர்களின் வெறியாட்டச் செயல்கள் 'ஒரு நாடு, இரு கொள்கைகள்' திட்டத்திற்குப் பங்கம் விளைவித்திருப்பதாக சீன வெளியுறவு அமைச்சு முன்னதாக வெளியிட்டிருந்த கருத்துகளை கர்னல் வூவின் கருத்துகள் பிரதிபலிக்கின்றன.

இதற்கிடையே, தைவானுக்கு சுதந்திரம் பெற்றுத் தர முனைவோரை சீனத் தற்காப்பு அமைச்சு கடுமையாக எச்சரித்துள்ளது.

''சீனாவிடமிருந்து தைவானைப் பிரிக்க யாராவது துணிந்தால், அவர்களுக்கு எதிராகச் சண்டையிட்டு நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்க சீன ராணுவம் ஒருபோதும் தயங்காது,'' என்றார் கர்னல் வூ.