பாகிஸ்தானில் 40 தீவிரவாத அமைப்புகள் இயங்கி வந்ததாக அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் முதன்முறையாக ஒப்புக்கொண்டுள்ளார். பாகிஸ்தானை ஆட்சி செய்த முந்தைய அரசாங்கங்கள், அந்நாட்டில் தீவிரவாத அமைப்புகளின் செயல்பாடுகள் தொடர்பான உண்மையைக் கடந்த 15 ஆண்டுகளாக அமெரிக்காவிடம் மறைத்துவிட்டதாக அவர் சொன்னார்.
''ஆப்கானிஸ்தான் அல்லது காஷ்மீர் பகுதியில் போரிட்ட 30,000 முதல் 40,000 வரையிலான தீவிரவாதிகள் எங்களது நாட்டில்தான் செயல்பட்டனர்,'' எனும் ஆச்சரியம் தரும் தகவலை அவர் முன்வைத்தார்.
அமெரிக்காவுக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டுள்ள திரு இம்ரான் கான், தலைநகர் வாஷிங்டனில் அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் பேசியபோது இந்த விவரங்களைத் தெரிவித்தார்.
தீவிரவாத அமைப்புகளை வேரோடு ஒழிக்க வேண்டும் என பாகிஸ்தானிடம் அமெரிக்கா முன்னதாக வலியுறுத்தி வந்தபோது, தன்னைத் தற்காத்துக்கொள்ளும் போராட்டத்தில் தமது நாடு இருந்ததாக அவர் கூறினார்.
தீவிரவாத அமைப்புகள் அப்போது ஆதிக்கம் செலுத்தி வந்த வேளையில், தம்மைப் போன்றவர்கள் மிகுந்த அச்சத்தில் வாழ்ந்ததை நினைவுகூர்ந்த அவர், உண்மையில் தங்களைக் காப்பாற்றிக்கொள்ளவே சிரமமாக இருந்த காலகட்டம் அது என்று சொன்னார்.
"தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்காவுடன் கைகோர்த்து நாங்கள் போராடிக்கொண்டிருந்தோம். செப்டம்பர் 11 தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆப்கானிஸ்தானில் இருந்துதான் அல்-காய்தா தீவிரவாத அமைப்பு செயல்பட்டு வந்தது.
''தலிபான் தீவிரவாதிகளும் பாகிஸ்தானில் செயல்படவில்லை. அதனால்தான் அமெரிக்காவுடன் இணைந்து நாங்கள் சண்டையிட்டோம். ஆனால், போர் மூண்டபோது, எங்களுக்கு எதிராக தவறான முடிவுகள் எடுக்கப்பட்டன.
பாகிஸ்தானில் இருந்த உண்மை நிலை அமெரிக்காவுக்குத் தெரியப்படுத்தப்படவில்லை. இதற்கு முன்னர் அமைந்த அரசுகள்தான் அதற்குக் காரணம்," என்று திரு இம்ரான் கான் விவரித்தார்.
இப்படிப்பட்ட சூழலில் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பை சந்தித்து நிலைமையைத் தெளிவுபடுத்தியது சரியானது என்றார் அவர்.
''நாம் முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்றால், இரு நாடுகளுக்கும் இடையில் நம்பிக்கை நிலவவேண்டும் என்பதை அதிபர் டிரம்ப்பிடம் வலியுறுத்தி இருக்கிறேன். இப்போதிலிருந்து அமெரிக்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவு சிறப்பானதாக அமையும் என்று உறுதியாக நம்புகிறேன்," என்று அவர் சொன்னார்.
இதற்கிடையே, தலிபானுடன் பேச்சுவார்த்தை நடத்தும் விவகாரத்தில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவே தாம் பார்ப்பதாக திரு இம்ரான் கான் சொன்னார்.

