சோல்: தென்கொரிய வான்வெளியில் ரஷ்ய ராணுவ விமானம் அத்துமீறி பறந்ததற்கு ரஷ்யா வருத்தம் தெரிவித்துக் கொண்டதாக தென்கொரிய அதிபர் அலுவலகம் தெரிவித்தது.
தென்கொரிய வான்வெளியில் ரஷ்ய விமானம் அத்துமீறி பறந்தது திட்டமிடப்பட்டது அல்ல என்றும் விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அந்த விமானம் தென்கொரிய வான் வெளிக்குள் பறந்திருக்கலாம் என்றும் ரஷ்யா தற்போது விளக்கம் அளித்திருப்பதாகவும் தென்கொரியா தெரிவித்துள்ளது.
இருப்பினும் அந்தச் சம்பவம் குறித்து ஆராய உடனடியாக புலன் விசாரணையைத் தொடங்கியிருப்பதாகவும் ரஷ்யா குறிப்பிட்டுள்ளது.
ரஷ்யா அதன் செயலுக்காக மிகவும் வருந்துவதாக தென்கொரிய தற்காப்பு அமைச்சிடம் தெரிவித்திருப்பதாக தென்கொரிய அதிபர் அலுவலகம் தெரிவித்தது.
முன்னதாக ரஷ்யாவின் இரு போர் விமானங்கள் தென்கொரிய வான்வெளியில் அத்துமீறி பறந்ததாக செவ்வாய்க்கிழமை தென்கொரியா கூறியது.
முதலில் இதனை மறுத்த ரஷ்ய தற்காப்பு அமைச்சு தற்போது ரஷ்ய விமானங்கள் தென்கொரிய வான்வெளியில் பறந்ததை ஒப்புக்கொண்டுள்ளது. ரஷ்யா ஆரம்பத்தில் திட்டமிட்ட வழியில் அதன் ராணுவ விமானம் சென்றிருந்தால் அத்துமீறல் சம்பவம் எதுவும் நடந்திருக்காது என்று ரஷ்ய தற்காப்பு அமைச்சின் பேச்சாளர் கூறியுள்ளார்.
இந்நிலையில் சீனா அதன் விமானங்கள் எதுவும் தென்கொரிய வான்வெளியில் அத்துமீறி நுழையவில்லை என்று தெரிவித்துள்ளது. ஜப்பான் கடல் பகுதியிலும் தென்சீனக் கடல் பகுதியிலும் ஜப்பானும் சீனாவும் சேர்ந்து மேற்கொள்ளும் ஆகாயப் பயிற்சியில் கலந்துகொள்வதற்காக ரஷ்ய விமானங்கள் அப்பகுதியில் பறந்ததாக ரஷ்ய தற்காப்பு அமைச்சு கூறியது.
செவ்வாய்க்கிழமை காலை ரஷ்யாவின் மூன்று விமானங்களும் சீனாவின் இரண்டு ராணுவ விமானங்களும் தென்கொரிய வான்வெளியில் அத்துமீறி நுழைந்ததாக தென்கொரிய ராணுவம் தெரிவித்தது.
ரஷ்யாவின் ஏ-50 ரக போர் விமானம் ஒன்றும் தென் கொரிய வான்வெளியில் அத்துமீறி பறந்ததாக ராணுவம் குறிப்பிட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து தென்கொரிய போர் விமானங்கள் பல முறை எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தென்கொரியா தெரிவித்தது.

