ஜகார்த்தா முன்னாள் ஆளுநர் பசுகி அஹோக்: எனது அரசியல் வாழ்க்கை முடிந்துவிட்டது

ஜகார்த்தா முன்னாள் ஆளுநர் பசுகி அஹோக்: எனது அரசியல் வாழ்க்கை முடிந்துவிட்டது

1 mins read

ஜகார்த்தா: ஜகார்த்தாவின் முன்னாள் ஆளுநர் பசுகி அஹோக் புர்னாமா தனது அரசியல் வாழ்க்கை முடிந்துவிட்டதாக நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.

இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோ புதிய அமைச்சரவை உறுப்பினர்களை விரைவில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படும் வேளையில் புதிய அமைச்சரவையில் புதியவர்களும் இடம்பெறுவர் என்று பரவலாகப் பேசப்படுகிறது.

புதிய அமைச்சரவையில் தனக்கு அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்று கூறப்படுவதை அஹோக் மறுத்துள்ளார். அது ஒருபோதும் நடக்காது என்று அவர் கூறி யுள்ளார்.

ஜகார்த்தா ஆளுநராக அஹோக் இருந்தபோது மக்கள் மத்தியில் நல்ல ஆதரவைப் பெற்றிருந்தார். அவர் ஆற்றிய உரை தொடர்பில் அவருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பழமைவாத முஸ்லிம் குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. 2017ஆம் ஆண்டு நடந்த ஜகார்த்தா ஆளுநர் பதவிக்கான தேர்தலில் அவர் தோல்வி அடைவதற்கு அவர் மீது தொடுக்கப்பட்ட வழக்கும் முக்கிய காரணமாக அமைந்தது.

இந்நிலையில் அஹோக் மீது சமய நிந்தனை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

அக்குற்றச்சாட்டின் பேரில் அவருக்கு ஈராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. கிட்டத்தட்ட ஈராண்டு சிறைத் தண்டனை முடிந்த பிறகு இந்த ஆண்டு தொடக்கத்தில் அவர் விடுவிக்கப்பட்டார். அஹோக் அவரது மனைவி வெர்னிக்கா டானை சென்ற ஆண்டு விவாகரத்து செய்தார்.