ஹாங்காங்: ஹாங்காங்கில் மக்கள் அவசரமாக வேலைக்குச் செல்லும் காலை நேரத்தில் ரயில் சேவையில் ஏற்பட்ட தாமதத்தால் பயணிகள் தவிக்க நேர்ந்தது. நேற்று ரயில் சேவை தாமதம் ஆனதற்குக் காரணம் ஆர்ப்பாட்டக்காரர்களே என்று ஹாங்காங் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஹாங்காங்கின் நிதி நிலையம் வழியாக செல்லக்கூடிய ரயில்களை செல்லவிடமால் ஒரு ரயில் நிலையத்தில் ஒன்றுகூடிய ஆர்ப்பாட்டாரர்கள் இடையூறு செய்ததாக ஹாங்காங் ரயில்வே உயர் அதிகாரி ஒருவர் கூறினார். ரயில்களில் பயணிகளை ஏறவிடாமல் ஆர்ப்பாட்டக்காரர்கள் தடுத்ததாகவும் ரயில் கதவுகளுக்கு முன்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் நின்று கொண்டு வழியை மறித்ததாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார். இதனால் அந்தத் தடம் வழியாக செல்லும் ரயில்களின் சேவை தாமதம் அடையும் என்று அந்த அதிகாரி அறிவித்தார்.
அந்த ஆர்ப்பாட்டத்தை போலிசார் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததைத் தொடர்ந்து ரயில் சேவை மீண்டும் தொடங்கியது என்று அவர் சொன்னார்.

