மலாக்கா, மலேசியா: மலாக்கா மாநிலத்திலுள்ள தஞ்சுங் மின்யாக் சமயக் கல்வி நிலையத்தின் 36 வயது முதல்வர், 15 வயது மாணவர் ஒருவரை மானபங்கம் செய்ததன் தொடர்பில் மலேசியாவிலுள்ள அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகிறார். முகம்மது ஃபிடாருஸ் அப்துல் ரஷிஃப் என்ற அந்தப் பள்ளி முதல்வர் ஒரு சிங்கப்பூரர்.
ஃபிடாருஸ் குற்றவாளி என உறுதிசெய்யப்பட்டால் அவருக்கு 60 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். ஐந்து பிள்ளைகளுக்குத் தந்தையான அவர் தனது மாணவனை மானபங்கப்படுத்தியதன் தொடர்பில் புதன்கிழமை குற்றம் சாட்டப்பட்டார். கடந்தாண்டு ஜூலை மாதம் 13ஆம் தேதியிலும் 18ஆம் தேதியிலும் கிலெபாங் கூட்டுரிமை வீட்டில் இந்தக் குற்றச்செயல்கள் நடந்ததாகக் கூறப்படுகிறது.
மலேசியாவில் பிள்ளைகள் மீதான பாலியல் குற்றங்களுக்கு எதிரான சட்டத்தின்படி ஃபிடாருஸ் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டால் அவருக்கு 20 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். அத்துடன், ஒவ்வொரு குற்றத்திற்காகவும் அவருக்குச் சவுக்கடி தண்டனை விதிக்கப்படலாம்.
ஃபிடாருஸுக்கு தற்போது 30,000 ரிங்கிட் பிணை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அவரது கடப்பிதழைப் பறிமுதல் செய்த நீதிமன்றம், மாதத்திற்கு ஒரு முறை அருகிலுள்ள போலிஸ் நிலையத்தில் அவர் முன்னிலையாகவேண்டும் என உத்தரவிட்டது.

