'வடகொரியாவின் ஏவுகணைச் சோதனையால் ஜப்பானின் பாதுகாப்புப் பாதிப்பில்லை '

'வடகொரியாவின் ஏவுகணைச் சோதனையால் ஜப்பானின் பாதுகாப்புப் பாதிப்பில்லை '

2 mins read

சோல்: வடகொரியா அதன் கிழக்குக் கடலோரப் பகுதியிலிருந்து இரண்டு ஏவுகணைகளை நேற்று காலை பாய்ச்சியதாக தென்கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது.

கொரியத் தீபகற்பத்தை அணுவாயுதமற்ற வட்டாரமாக்குவது தொடர்பான பேச்சுவார்த்தையைத் தொடர அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னும் இணங்கியதை அடுத்து, வடகொரியா முதல்முறையாக ஏவுகணைச் சோதனை நடத்தியுள்ளது.

வொன்சான் பகுதியிலிருந்து பாய்ச்சப்பட்ட அந்த ஏவுகணைகள் 50 கிலோ மீட்டர் உயரத்தை அடைந்து 430 கிலோ மீட்டர் தூரம் சென்று கிழக்குக் கடலுக்குள் விழுந்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தென்கொரிய தற்காப்பு அமைச்சு கூறியது.

பாய்ச்சப்பட்ட ஏவுகணைகள் தனது தனிப்பட்ட பொருளியல் வட்டாரத்தை எட்டவில்லை என்று ஜப்பானின் கியோடோ செய்தி நிறுவனம் தெரிவித்தது.

வடகொரியாவின் ஏவுகணைச் சோதனை ஜப்பானின் தேசிய பாதுகாப்புக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்றும் அது கூறியது.

வடகொரியா ஏவுகணைகளை நேற்று பாய்ச்சியதால் அதற்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை நடக்குமா என்பது குறித்து சந்தேகம் எழுந்துள்ளது.

இதுகுறித்து வெள்ளை மாளிகை, அமெரிக்காவின் தற்காப்பு அமைச்சு ஆகியவை உடனடியாகக் கருத்து தெரிவிக்கவில்லை.

கொரியத் தீபகற்பத்தில் நிலவி வரும் பதற்றநிலையைக் குறைக்க உதவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதை நிறுத்தும்படி தென்கொரியாவின் தற்காப்பு அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

நேற்று நடத்தப்பட்ட ஏவுகணைச் சோதனை தென்கொரியாவுக்கு விடுக்கப்பட்ட மிரட்டல் என எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

"நிலைமை எங்கள் நாட்டின் தேசிய பாதுகாப்பைப் பாதிக்கக்கூடியதாக இல்லை. நாங்கள் அமெரிக்காவுடன் மிக அணுக்கமாக செயல்படுவோம்," என்று ஜப்பான் பிரதமர் திரு ஷின்சோ அபே செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.