மெல்பர்ன் பள்ளிவாசலுக்குத் தீவைத்த மூவருக்கு நீண்டகால சிறைவாசம்

மெல்பர்ன் பள்ளிவாசலுக்குத் தீவைத்த மூவருக்கு நீண்டகால சிறைவாசம்

1 mins read

மெல்பர்ன்: ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் உள்ள ஷியா பள்ளிவாசலுக்குத் தீவைத்த மூவருக்கு நீண்டகால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இமான் அலி இஸ்லாமிய நிலையத்துக்குத் தீவைத்த 28 வயது அப்துல்லா சாரானி, 26 வயது அகமது முகம்மது, 30 வயது ஹடிம் மொகைபர் ஆகியோர் குற்றவாளி என நடுவர் குழு தீர்ப்பளித்தது. மூவரும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சன்னி முஸ்லிம்கள்.

முகம்மதுக்கும் சாரானிக்கும் தலா 22 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

17 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்த பிறகே நன்னடத்தை காரணமாக விடுதலை பெற அவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

மொகைபருக்கு 16 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

12 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் நன்னடத்தை காரணமாக விடுதலை பெற விண்ணப்பம் செய்யலாம்.

சகிப்புத்தன்மையின்மை, வெறுப்பு ஆகியவற்றால் இந்த மூவரும் பயங்கரவாத தாக்குதலை நடத்தியதாக நீதிபதி தெரிவித்தார். இந்த மூவரும் நடத்திய தாக்குதல் சமயச் சுதந்திரத்துக்கு எதிரானது என்றும் அது மன்னிக்க முடியாத குற்றம் என்றும் அவர் கூறினார்.

அந்த பள்ளிவாசலுக்குத் தீவைப்பதற்கு முன்பு அதன் சுவரில் ஐஎஸ் என்று சாயம் அடிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

தீச்சம்பவத்தில் அந்தப் பள்ளிவாசல் கிட்டத்தட்ட முழுமையாக அழிந்தது.