போர்வெறியர்களுக்கு எச்சரிக்கை என்கிறது கொரியா

போர்வெறியர்களுக்கு எச்சரிக்கை என்கிறது கொரியா

2 mins read

பியோங்யாங்: தென்கொரிய போர்வெறியர்களுக்கு எச்சரிக்கை விடுப்பதற்காகவே இரு ஏவுகணைகளைச் சோதித்துப் பார்த்ததாக வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் தெரிவித்துள்ளார்.

அவர்கள் ஆயுதங்களை இறக்குமதி செய்வதையும் கூட்டு ராணுவப் பயிற்சிகளில் ஈடுபடுவதையும் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று கிம் எச்சரித்துள்ளார். இது அமெரிக்காவுக்கு விடுக்கப்பட்ட மறைமுக எச்சரிக்கை என்றும் சொல்லப்படுகிறது.

குறுகிய தொலைவு செல்லும் இரு ஏவுகணைகளை வடகொரியா நேற்று முன்தினம் சோதித்துப் பார்த்தது. கடந்த பிப்ரவரி மாதம் வியட்னாமில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பைச் சந்தித்துப் பேசிய பிறகு வடகொரியா மேற்கொண்ட முதல் ஏவுகணைச் சோதனையும் இதுதான்.

இதையடுத்து, அமெரிக்கா-வடகொரியா இடையே அணுவாயுத ஒழிப்பு தொடர்பு பேச்சுவார்த்தை மீண்டும் தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வியட்னாம் தலைநகர் ஹனோயில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், "எமது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலான மிரட்டல்களை அழித்தொழிக்கவல்ல ஆற்றல் வாய்ந்த ஆயுதங்களை எங்களால் உருவாக்க முடியும்," என்று கிம் கூறியுள்ளார்.

அமைதியை விரும்புவதாகக் கூறிக்கொள்ளும் தென்கொரியா, அதே நேரத்தில் ஆயுதங்கள் இறக்குமதியிலும் கூட்டு ராணுவப் பயிற்சியிலும் ஈடுபட்டு 'இரட்டை வேடம்' போடுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

இதுபோன்ற தன்னையே மாய்த்துக்கொள்ளும் நடவடிக்கைகளை தென்கொரியத் தலைவர் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் இந்த எச்சரிக்கையைப் புறந்தள்ளுவதன்மூலம் தவறிழைத்துவிட வேண்டாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையே, வடகொரியாவின் ஏவுகணைச் சோதனை அமெரிக்காவிற்கோ அல்லது தென்கொரியாவிற்கோ மிரட்டல் விடுக்கும் வகையில் இல்லை என்றும் அது தங்களது தற்காப்பு நிலைகள் மீது எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றும் அமெரிக்க-தென்கொரியப் படைகளின் கூட்டுத் தளபத்தியத்திற்கான பேச்சாளர் கர்னல் லீ பீட்டர்ஸ் தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில், வடகொரியா சோதித்துப் பார்த்தது புதுவகை ஏவுகணைகள்போல் தெரிகிறது என்றும் அவர் சொன்னார்.