கோலாலம்பூர்: பிகேஆர் கட்சியின் துணைத் தலைவரும் மலேசிய பொருளியல் விவகார அமைச்சருமான திரு அஸ்மின் அலி, கட்சியைவிட்டு விலகப் போவதாக வெளியான தகவலை கட்சியின் தலைவர் அன்வார் இப்ராஹிம் மறுத்துள்ளார்.
இதுபோன்ற செய்தியை தாம் இதுவரை கேள்விப்படவில்லை என்றும் ஊடகத்திடமிருந்துதான் தாம் இச்செய்தி பற்றி அறிந்துகொண்டதாகவும் கூறிய திரு அன்வார், இது ஒரு பொய்ச்செய்தி என்றார்.
மலேசிய நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற மலேசிய பொருளியல் கருத்தரங்கில் கலந்து கொண்ட திரு அன்வார், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
இத்தகைய செய்தியை உட்கட்சித் தேர்தலில் தோற்றவர்கள்தான் பரப்பியிருக்க வேண்டும் என்று அஸ்மினின் அரசியல் செயலாளர் ஹில்மான் இதாம் கூறினார்.
அஸ்மினுக்கு கட்சியின் மாநிலப் பிரிவுத் தலைவர்கள், மகளிர் அணிகள், கட்சி உறுப்பினர்கள் ஆகியோரிடமிருந்து நல்ல ஆதரவு இருந்து வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
தாமும் அஸ்மினும் இன்னும் ஒரு குழுவாகவே செயல்பட்டு வருகிறோம் என்று கூறிய திரு அன்வார், தங்களுக்குள் எந்த வாக்குவாதமும் இல்லை என்றும் சொன்னார்.
பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பிகேஆர் கட்சியிலிருந்து விலகி, தேசிய முன்னணி கூட்டணியில் முன்பு அங்கம் வகித்த கெராக்கான் கட்சியில் அஸ்மின் இணையப்போவதாக வதந்தி கிளம்பியுள்ளது.
இதற்கிடையே, கெராக்கான் கட்சியின் தலைவர் டோமினிக் லாவ், தமது கட்சியில் இணைய திரு அஸ்மின் அலியிடமிருந்து எவ்வித விண்ணப்பமும் இதுவரை வரவில்லை என்று கூறியுள்ளார்.
"இந்த விவகாரம் தொடர்பில் நேரடி பேச்சு வார்த்தைகள் எதுவும் நிகழவில்லை என்றாலும் மறைமுகமான பேச்சு வார்த்தைகள் கெராக்கான் கட்சிக்கும் திரு அஸ்மின் அலியைப் பிரதிநிதிக்கும் பிகேஆர் கட்சித் தலைவர்களுக்கும் இடையே நடைபெற்றது," என்றும் திரு லாவ் விவரித்தார்.
திரு அஸ்மின் கெராக்கான் கட்சியில் சேரப் போகிறார் என்ற வதந்தி பாலியல் காணொளி விவகாரத்துக்கு முன்பிருந்தே இருந்து வருகிறது என்று திரு லாவ் கூறியதாக தி ஸ்டார் நேற்று செய்தி வெளியிட்டது.
பல இன உறுப்பினர்களைக் கொண்ட சீனர் தலைமைத்துவத்திலான கெராக்கான் கட்சி, தற்போதைய மலேசிய நாடாளுமன்றத்திலும் 13 மாநில சட்ட மன்றங்களிலும் எந்த ஓர் இடத்தையும் பெற்றிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
"வதந்தி எப்போதும் வதந்தியாகவே இருக்கும்," என்று அதை நிராகரித்தார் பிகேஆர் கட்சியின் உதவித் தலைவர் ஸுரைடா கமாருடின்.
"திரு அஸ்மின் கட்சி உறுப்பி னர்களால் தேர்வு செய்யப்பட்டவர். மற்றவர்கள் கூறுவதுபோல அவ்வளவு எளிதில் அவர் வெளியேற முடியாது," என்றும் திருவாட்டி ஸுரைடா கூறினார்.

