கோலாலம்பூர்: மலேசியப் பிரதமர் டாக்டர் மகாதீர் அவரது தவணைக்காலம் முடியும் வரை பிரதமராக இருக்க அம்னோவும் பாஸ் கட்சியும் பாடுபடும் என்று பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங் தெரிவித்துள்ளார். டாக்டர் மகாதீர் அவரது தவணைக்காலம் முடிவதற்கு முன்பே பிரதமர் பதவியை கெஅடிலான் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமிடம் ஒப்படைப்பது என்று பக்கத்தான் ஹரப்பான் ஒருமித்த முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஹரப்பானின் மற்ற கட்சிகளைவிட டாக்டர் மகாதீரின் மலாய் முஸ்லிம் கட்சியான பெர்சத்துவைத் தற்காப்பது முக்கியம் என்று ஹாடி கூறியதாக நாளேடு ஒன்று தெரிவித்தது. பெர்சத்து கட்சிக்கு நாடாளுமன்றத்தில் 11 இடங்கள் மட்டுமே உள்ளன. அரசாங்கத்தில் அவர்களின் நிலை வலுவானதல்ல. "அதனால்தான் நாங்கள் அம்னோவின் துணையுடன் மகாதீர் முழுத் தவணைக்கும் பிரதமராக இருக்க பாடுபடுவோம்," என்று அப்துல் ஹாடி கூறியுள்ளார். பிரதமர் பொறுப்பை டாக்டர் மகாதீர் திரு அன்வாரிடம் விரைவில் ஒப்படைக்க வேண்டும் என்று சிலர் வலியுறுத்தி வரும் வேளையில் அப்துல் ஹாடி இவ்வாறு கூறியுள்ளார்.

