டெஹ்ரான்: வளைகுடா கடல் பகுதியில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமையிலான கடற்படை, எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பாகச் செல்வது என்ற இங்கிலாந்தின் யோசனை எரிச்சலூட்டுகிறது என்று ஈரான் சாடியுள்ளது.
"வளைகுடா பகுதிக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் கடற்படையை அனுப்ப விரும்புவதாக நாங்கள் கேள்விப்பட்டோம்.
"இச்செய்தி இயற்கையிலேயே பகைமை பாராட்டும் வகையில் உள்ளது. மேலும் இங்கிலாந்தின் இச்செயல் எரிச்சலூட்டுவதோடு மட்டுமல்லாமல் பதற்றத்தையும் அதிகரிக்கும்," என்று ஈரான் அரசாங்கப் பேச்சாளர் அலி ரபியி கூறியதாக ஐஎஸ்என்ஏ என்ற செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
எண்ணெய் வளம் மிக்க வளைகுடா பகுதியின் பாதுகாப்பை அவ்வட்டாரத்தில் உள்ள நாடுகளே பராமரிக்க வேண்டும் என்று ஈரான் நம்புவதாகவும் அவர் சொன்னார்.
பாரசீக வளைகுடா பகுதியில் கடல்பகுதி பாதுகாப்பில் தாங்களே முக்கியப் பங்கு வகிப்பதாகவும் அவர் பறைசாற்றினார்.
இம்மாதம் 19ஆம் தேதி இங்கிலாந்து எண்ணெய்க் கப்பல் ஒன்றை ஈரான் கைப்பற்றியது.
இதையடுத்து, எண்ணெய்க் கப்பல்களுக்கு ஐரோப்பிய தலைமையிலான கடற்படை பாதுகாப்பு கவசமாக செல்வது குறித்து திட்டமிடுவதாகக் கடந்த திங்கட்கிழமை இங்கிலாந்து கூறியது.
முன்னதாக, ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையை மீறி சிரியாவிற்கு ஈரான் எண்ணெய் கொண்டு செல்வதாக சந்தேகித்த இங்கிலாந்து கடற்படை ஈரான் கப்பலைச் சிறைபிடித்தது.
அமெரிக்கா அல்லாத பல்வேறு அனைத்துலக நாடுகளை ஒன்றிணைத்த இங்கிலாந்தின் இந்தப் பாதுகாப்புத் திட்டத்திற்கு, வட்டார நாடுகளிடம் இருந்து இதுவரை சாதகமான பதிலே கிட்டியுள்ளது.
இதற்கிடையே, கூடுதல் ராணுவப் படைகளை அனுப்ப தயாராக இல்லை என்றாலும் தற்போது உள்ள படைகளின் மூலம் தகவல்களைப் பரிமாறிக் கொள்வதில் ஒத்துழைப்பதாகவும் பிரான்ஸ் கூறியது.

