மாஸ்கோ: தேர்தலை நியாயமாக நடத்தக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 1,400 பேரை ரஷ்ய போலிசார் கைது செய்தனர்.
ரஷ்யாவின் மாஸ்கோ நகர உள்ளாட்சி உறுப்பினர்களுக்கான தேர்தல் வரும் செப்டம்பர் 8ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்தத் தேர்தலில் போட்டியிடுவதற்கு முக்கிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் தாக்கல் செய்த வேட்புமனுக்களில் குளறுபடிகள் இருப்பதாகக் கூறி அவர்களுக்கு தேர்தல் அதிகாரிகள் தடை விதித்தனர்.
இந்த முடிவைத் திரும்பப் பெறக் கோரியும் எதிர்க்கட்சி உறுப்பினர்களைத் தேர்தலில் போட்டியிட அனுமதிக் கோரியும் கடந்த 21ஆம் தேதி சுமார் 22,000 பேர் வீதிகளில் இறங்கி கோரிக்கை விடுத்தனர்.
அதைத்தொடர்ந்து, நேற்று முன்தினம் 3,500க்கும் மேற்பட்டோர் மாஸ்கோ மேயர் அலுவலகம் அருகே 6 மணி நேரத்திற்கும் மேல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களைக் கட்டுப்படுத்துவதற்காக போலிசார் நடத்திய தாக்குதலில் பலர் காயம் அடைந்ததாகக் கூறப்படுகிறது.
எதிர்கட்சியினர் உட்பட, போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 1,400 பேரை போலிசார் கைது செய்தனர்.
இது கடந்த 2012ஆம் ஆண்டு விளாடிமிர் புட்டின் கிரிம்லினுக்குத் திரும்பியதை எதிர்ந்து நடத்தப்பட்ட போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களைவிட அதிகம் என்கிறது போராட்டத்தைக் கண்காணித்து வரும் ஓவிடி இன்ஃபோ எனும் அமைப்பு. இதற்கிடையே, அடுத்த வாரஇறுதியிலும் மீண்டும் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

