தோக்கியோ: ஜப்பானில் நீடிக்கும் வழக்கத்திற்கு மாறான நீண்ட மழை, குளிர்காலத்தால் சில்லறை வியாபாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக வர்த்தகர்கள் கூறுகின்றனர்.
இவ்வாண்டு ஜூலை மாதத்தில் தோக்கியோ இதுவரை வெறும் 44 மணி நேர பகல்வெளிச்சத்தை மட்டுமே பார்த்துள்ளது.
கடந்த 1890ஆம் ஆண்டு முதல் வானிலையைப் பதிவு செய்து வரும் ஜப்பான் வானிலை ஆய்வு மையத்தின் புள்ளிவிவரப்படி இதுவே ஆகக் குறைவான பகல்வெளிச்ச நேரம் என்பது குறிப்பிடத்தக்கது.
மழை, மேகமூட்டம் காரணமாக வார இறுதி நாட்களில்கூட மக்கள் வெளியே வரத் தயங்குகின்றனர்.
இதனால், ஆடை, அறைகலன்கள், உள்ளிட்ட பொருட்களின் தேவையும் மக்களுக்குக் குறைந்துவிட்டதால் சில்லறை வர்த்தகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானின் பிரபலமான ஷிமமுரா ஆடை நிறுவனம், கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு 18 விழுக்காடு வர்த்தகம் குறைந்துவிட்டதாக தெரிவித்துள்ளது.
தற்போதைய பருவநிலை எப்போது முடிவடையும் என்பது பற்றி வானிலை ஆய்வு மையம் எந்தத் தகவலும் தெரிவிக்கவில்லை.
ஆனால், இம்மாதிரியான பருவநிலை கடந்த ஆண்டு வழக்கத்துக்கு மாறான குறுகிய காலமே நீடித்த நிலையில், ஜூன் 29ஆம் தேதியே முடிந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

