கப்பல்களை மாற்றிக்கொள்ளும் ஈரானின் யோசனையை நிராகரித்தது பிரிட்டன்

கப்பல்களை மாற்றிக்கொள்ளும் ஈரானின் யோசனையை நிராகரித்தது பிரிட்டன்

2 mins read

பிரிட்டன் தடுத்து வைத்திருக்கும் தனது எண்ணெய் கப்பலை விடுவித்தால் தாம் தடுத்துவைத்திருக்கும் பிரிட்டனின் கப்பலை விடுவிப்பதாக ஈரான் தெரிவித்த யோசனையை பிரட்டன் நிராகரித்துள்ளது.

இம்மாதத் தொடக்கத்தில் ஈரானிய மின்னற்படை வீரர்கள் பிரிட்டனின் எண்ணெய் கப்பலைத் தடுத்து வைத்ததிலிருந்து ஈரானுக்கும் பிரிட்டனுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.

சிரியாவுக்கு எதிராகப் போடப்பட்டுள்ள தடைகளுக்கு எதிராக ஈரான் செயல்பட்டது என்ற காரணத்தால், ஜிப்ரால்டாருக்கு அருகில் ஈரானிய எண்ணெய் கப்பலை பிரிட்டிஷ் படைகள் தடுத்து வைத்த பிறகு, ஈரான் பதில் நடவடிக்கையாக பிரட்டனின் கப்பலைத் தடுத்து வைத்தது.

"இது பண்டமாற்று சம்பந்தப்பட்டது அல்ல. இது அனைத்துலக கடல் சட்டம் மற்றும் அனைத்துலக நீதித்துறை பற்றியது. அது எக்காலத்திலும் கட்டிக்காக்கப்பட வேண்டும்," என்று பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் டோமினிக் ராப் தெரிவித்தார் என்று பிபிசி வானொலி கூறியது.

"அனைத்துலக சமூகத்தின் பொறுப்புமிக்க உறுப்பினராக ஈரான் தன்னை உறுதிப்படுத்திக் கொள்ள அது அனைத்துலக சமூகத்தின் சட்டதிட்டங்களை மதித்து நடக்க வேண்டும். அவர்கள் சட்டத்துக்குப் புறம்பாக வெளிநாட்டுக் கப்பல்களைத் தடுத்து வைக்கக்கூடாது," என்று திரு ராப் மேலும் தெரிவித்தார்.

இதற்கிடையே, இம்மாதம் 19ஆம் தேதி பிரிட்டனின் கப்பல் ஹோர்முஸ் நீரிணையில் தடுத்து வைக்கப்பட்டவுடன் அங்கு அனுப்பப்பட்ட பிரிட்டிஷ் போர்க்கப்பலுக்கு ஈரானிய படையினர் எச்சரிக்கை விடுத்த எச்சரிக்கை அடங்கிய ஒலிப்பதிவை ஈரான் நேற்று வெளியிட்டது.

"இந்த விவகாரத்தில் தலையிட உங்களுக்கு உரிமை இல்லை," என்று ஈரானிய கடற்படையின் பிரதிநிதி பிரிட்டஷ் போர்க்கப்பலுக்கு கட்டளையிட்டது.

"இது பிரிட்டிஷ் போர்க்கப்பல் F236. இது அனைத்துலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட நீரிணை என்பதால் இந்தப் பாதையில் பயணம் செய்ய எனக்கு உரிமை உண்டு," என்று பிரிட்டிஷ் போர்க்கப்பல் பிரதிநிதி கூற, "நீங்கள் ஆபத்தில் சிக்கிக்கொள்ளதீர்கள்," என்று ஈரான் கப்பல் பதிலளித்தது.

இம்மாதம் 11ஆம் தேதி அதே ஹோர்முஸ் நீரிணையில் மூன்று ஈரானிய கப்பல்கள் 'பிரிட்டிஷ் ஹெரிடேஜ்' எனும் கப்பலை இடைமறிக்க முயன்றது.

ஆனால், பிரிட்டிஷ் போர்க்கப்பல் கடுமையான எச்சரிக்கை விடுத்ததும் ஈரானிய கப்பல்கள் அந்தக் கடற்பகுதியிலிருந்து சென்றுவிட்டன என்று பிரிட்டிஷ் அரசாங்கம் முன்னதாகத் தெரிவித்தது.