ஹாங்காங்கின் வளர்ச்சி நசுக்கப்படுவதாக அமெரிக்க வர்த்தக சம்மேளனம் கவலை

ஹாங்காங்கின் வளர்ச்சி நசுக்கப்படுவதாக அமெரிக்க வர்த்தக சம்மேளனம் கவலை

2 mins read

ஹாங்காங்: ஹாங்காங்கில் அண்மைய காலமாக நடந்துவரும் போராட்டங்களால் அந்நாட்டின் பொருளியல் வளர்ச்சி நசுக்கப்படுவதாக அமெரிக்க வர்த்தக சம்மேளனம் கவலை தெரிவித்துள்ளது. ஹாங்காங்கில் நிலவிவரும் போக்கைக் கட்டுப்படுத்துவதற்கு அந்நாட்டு அரசாங்கம் ஆவண செய்ய வேண்டும். அப்போதுதான் அந்நாட்டில் வர்த்தகத்தை மீண்டும் நல்ல நிலைக்குக் கொண்டு வந்து பொருளியல் மீட்சி பெற முடியும் என்று சம்மேளனம் கேட்டுக்கொண்டுள்ளது.

குற்றவாளிகள் என சந்தேகிக்கப்படுபவர்கள் சீனாவுக்கு நாடு கடத்தப்பட வேண்டும் என்ற புதிய சட்டத்தை எதிர்த்து ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் அந்தச் சட்டம் மீட்டுக்கொள்ளப்பட்டு இப்போது இடைக்காலமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு சரியான தீர்வு காண்பதற்கு அனைத்துலக அளவில் ஏற்புடைய குழு ஒன்றை அமைத்து ஹாங்காங் மக்களின் போராட்ட இயக்கம் குறித்தும் இடைக்காலத் தடை செய்யப்பட்ட நாடு கடத்தும் சட்டம் குறித்தும் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அந்த சம்மேளனம் நேற்று தெரிவித்தது. சம்மேளனத்தின் உறுப்பினர்கள் பெரும்பாலானோரின் கருத்துக்குஇணங்க இந்த ஆலோசனையைத் தெரிவிப்பதாக அதன் அறிக்கையில் தெரிவித்தது.

ஹாங்காங் மக்களின் கோரிக்கைகளுக்குச் செவிசாய்த்து அவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில் அரசாங்கம் சரியான நடவடிக்கையை எடுக்க வேண்டும். அப்போதுதான் உலக நாடுகளில் ஹாங்காங்கிற்கு இருக்கும் செல்வாக்கு கட்டிக்காக்கப்படும் என்றார் சம்மேளனத்தின் தலைவர் தாரா ஜோசப். ஹாங்காங் 1997ல் சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது முதல் அது தனித்து இயங்க வழிவிடப்படும் என்ற சீனாவின் உத்தரவாதத்தை அவர் சுட்டிக்காட்டினார். ஹாங்காங்கின் போராட்டம் ஓய்வதற்கான அறிகுறி கொஞ்சமும் இல்லாமல் தொடர்ந்து 8 வாரங்களாக நடைபெற்று வருகிறது. இதனால் பெரும் அளவில் பாதிக்கப்பட்ட நிதிச் சேவை நிறுவனங்கள், தளவாட விநியோக நிறுவனங்கள், போராட்டக்காரர்களில் சிலருடைய தேவையையாவது அரசாங்கம் கேட்டறிந்து அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம் என்று வலியுறுத்தியுள்ளன.

அமெரிக்க வர்த்தக சம்மேளனம் வெளியிட்டுள்ள அறிக்கையைப் போன்றே ஹாங்காங்கின் பொது வர்த்தக சம்மேளனம் கடந்த வாரம் ஓர் அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கையில், நாடு கடத்தும் சட்டத்தை மீட்டுக் கொள்ளுதல், விசாரணை ஆணையம் ஒன்று அமைத்தல் ஆகிய கோரிக்கைகளை விடுத்திருந்தது.

இந்நிலையில் ஹாங்காங் தலைமை நிர்வாக அதிகாரியான கேரி லாம், குற்றவாளிகள் என சந்தேகிக்கப்படுபவர்கள் சீனாவுக்கு நாடுகடத்தும் சட்டம் செயலிழந்து விட்டது என்றார். இருப்பினும் அவர் அதிகாரபூர்வமாக அந்தச் சட்டம் மீட்டுக் கொள்ளப்பட்டதாக அறிவிக்கவில்லை.