வாஷிங்டன்: பல இன மக்களைக் கொண்டுள்ள அமெரிக்காவின் குடியரசுக் கொள்கையில் அதிபர் டோனல்ட் டிரம்ப் நச்சு கலக்கிறார் என்ற கருத்தைக்கொண்ட தலையங்கக் கட்டுரை ஒன்றை முன்னாள் அதிபர் ஒபாமா தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். அவரது நிர்வாகத்தில் பணிபுரிந்த 147 ஆப்பிரிக்க அமெரிக்கர்களால் எழுதப்பட்ட அந்தக் கட்டுரையை திரு ஒபாமா வழிமொழிந்தார்.
இதுவரையிலும் தற்போதுள்ள அரசியல் குறித்தும் அரசியல்வாதிகள் குறித்து எவ்விதக் கருத்தும் தெரிவிக்காமல் இருந்து வந்த திரு ஒபாமா, இப்போது அதிபர் டிரம்ப் பற்றிய கட்டுரையை பகிர்ந்துள்ளார்.
அண்மையில் அதிபர் டிரம்ப், அமெரிக்காவின் கறுப்பின நாடாளுமன்ற பெண் உறுப்பினர்கள் நான்கு பேரை ஆப்பிரிக்க நாடுகளுக்கு நாடு கடத்த வேண்டும் என்று இணையத்தில் பதிவிட்டு சர்ச்சையைக் கிளப்பியிருந்தார். அதற்குப் பதிலளிக்கும் வகையில் திரு ஒபாமா இந்தத் தலையங்கக் கட்டுரையை முன்மொழிந்துள்ளார்.
"எனது நிர்வாகத்தில் பணியாற்றியவர்களை எண்ணி எப்போதுமே பெருமை கொள்வதுண்டு. அமெரிக்காவின் நலன் கருதி தொடர்ந்து போராடி வரும் அவர்களை எண்ணி பெருமை கொள்கிறேன்," என்று டுவிட்டர் பதிவில் கூறி வாஷிங்டன் போஸ்ட்டில் வெள்ளிக்கிழமை மாலை வெளியான அந்தத் தலையங்கத்திற்கான இணைய முகவரியை வெளியிட்டிருந்தார்.

