டெங்கி பரவலைக் கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் தவிக்கும் பங்ளாதே‌ஷ்

டெங்கி பரவலைக் கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் தவிக்கும் பங்ளாதே‌ஷ்

1 mins read

டாக்கா: பங்ளாதே‌ஷ் இதுவரையிலும் காணாத நாட்டின் மிக மோசமான டெங்கி காய்ச்சல் பரவலைச் சந்தித்து வருகிறது என்று அதன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அங்குள்ள மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன என்றும் ரத்த நன்கொடையாளர்களுக்கு அழைப்பு விடுக்கும் அறிவிப்புகள் சமூக ஊடகங்களில் அதிகரித்து வருகின்றன என்றும் கூறப்பட்டது.

இவ்வாண்டில் இதுவரை 13,637 டெங்கி சம்பவங்கள் இந்நாட்டில் நிகழ்ந்துள்ளன. அவற்றில் 8 பேர் இதுவரை மரணமடைந்தனர். கடந்த 24 மணி நேரத்தில் 1,100 பேர், குறிப்பாக அதிகமான குழந்தைகள் டெங்கி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரத்துவ புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. "கடந்த 20 ஆண்டுகளில் அதிர்ச்சியளிக்கும் இந்த அளவில் நாங்கள் பார்த்ததில்லை என்று அந்நாட்டின் சுகாதார அமைச்சின் மூத்த அதிகாரி அயி‌ஷா அக்தர், ஏஎப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

மரணமடைந்தோர் எண்ணிக்கை குறைந்தது 30 ஆக இருக்கும் என்று உள்ளூர் நாளிதழான அமதர் சோமோய் தெரிவித்துள்ளது. மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நகரங்களில் தலைநகர் டாக்கா முதலிடத்தில் உள்ளது. அங்கு ஏடிஸ் கொசுக்களை ஒழித்துக்கட்ட பல்வேறு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.