சோல்: மத்திய கிழக்கில் அமெரிக்கத் தலைமையிலான கடற்படையில் பங்குகொள்ள தனது கடற்படைப் பிரிவு ஒன்றை ஹோர்முஸ் கடற்பகுதிக்கு தென்கொரியா அனுப்ப இருப்பதாக அந்நாட்டு செய்தித்தாள் ஒன்று நேற்று தெரிவித்துள்ளது. ஹோர்முஸ் கடற்பகுதியில் செல்லும் எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பாக எதிரிக் கப்பல்களைத் துடைத்தொழிக்கும் 'டெஸ்ட்ராயர்' உள்ளிட்ட கப்பல்களையும் அனுப்பவுள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் வர்த்தகத் தடை விதித்துள்ளதால் அந்த இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றம் அதிகரித்து வருகிறது. அண்மையில் ஹேர்முஸ் கடற்பகுதியில் எண்ணெய்க் கப்பல் ஒன்று தாக்குதலுக்கு உள்ளானது. அதனையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பைப் பலப்படுத்துவதற்கு அமெரிக்கா அதன் நட்பு நாடுகளுக்கு அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து தென்கொரியா இந்த முடிவை எடுத்துள்ளதாக தென்கொரியாவின் 'மாயெக்யங்' என்னும் வர்த்தக நாளிதழ் தெரிவித்தது. இது குறித்து கருத்துத் தெரிவித்த அந்நாட்டு தற்காப்பு அமைச்சு, ஹோர்முஸ் கடற்பகுதியில் தங்கள் நாட்டு கப்பல்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது. ஆனால் அதுகுறித்து இன்னமும் முடிவு செய்யப்படவில்லை என்றும் தெரிவித்தது.

