பாலித் தீவில் கையும் களவுமாக பிடிபட்ட இந்திய குடும்பம்

பாலித் தீவில் கையும் களவுமாக பிடிபட்ட இந்திய குடும்பம்

2 mins read
a6991219-b20c-4ba2-b616-ef40396b404c
ஹோட்டலுக்கு வெளியே இந்தியப் பயணிகளின் பயணப் பெட்டியைத் திறந்து சோதனையிடும் ஹோட்டல் ஊழியர்களில் ஒருவர். (வலக்கோடி) காணொளிப் படம் -
Google News Preferred Icon

இந்தோனீசியாவின் பாலித் தீவிலுள்ள ஹோட்டல் அறையில் இருந்த பொருட்களைத் திருடிய இந்திய குடும்பம் ஒன்று கையும் களவுமாக பிடிபட்டதைக் காட்டும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

சமூக வலைத்தளப் பயனாளர் ஹேமந்த் என்பவர் தமது டுவிட்டர் பக்கத்தில் கடந்த சனிக்கிழமை பதிவேற்றம் செய்த அந்தக் காணொளி நேற்று நிலவரப்படி 317,000க்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டது.

அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த இருவர், ஹோட்டல் ஊழியர்கள் என நம்பப்படும் இருவருடன் வாக்கு

வாதத்தில் ஈடுபட்டதை அந்தக் காணொளி காட்டியது.

ஹோட்டல் ஊழியர்களில் ஒருவர், குடும்பத்தினரின் பயணப் பெட்டியிலிருந்து அவர்கள் வசித்த ஹோட்டல் அறையிலிருந்து சோப்பு, குளியல் துண்டுகள், கண்ணாடி, தலைமுடியைக் காயவைக்கும் இயந்திரம் ஆகியவற்றை மீட்டெடுத்ததைக் காணொளி காட்டியது.

பிடிபட்ட குடும்ப உறுப்பினர்களில் ஒருவர், "பொருட்களுக்கான பணத்தை நான் செலுத்தி விடுகிறேன்," என்று ஹோட்டல் ஊழியரிடம் கூறினார். அதற்கு அசையாத அந்த ஊழியர், பணத்தைப் பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்.

"உங்களிடம் அதிகளவில் பணம் உள்ளது என்பது எனக்குத் தெரியும். ஆனால் பொருட்களைத் திருடுவது சரியான ஒன்றல்ல," என்று அந்த ஊழியர் பதிலளித்தார்.

இந்நிலையில், டுவிட்டரில் பதிவிட்ட திரு ஹேமந்த், "இந்தோனீசியாவில் வசித்து பாலித் தீவுக்குச் சென்றுள்ள நான் இதுவரை பார்த்த வரையில் இந்தோனீசியர்கள் மிக மென்மையானவர்களாகவும் கனிவானவர்களாகவும் உள்ளனர் என்பதை அறிவேன்.

"இந்தியாவையும் இந்தியர்களையும் இந்தோனீசியர்கள் பெரிதும் மதிப்பதால் இத்தகைய ஒரு சம்பவத்தில் நாம் சிக்கிக்கொண்டது பெரும் வேதனையைத் தருகிறது," என்று குறிப்பிட்டார்.

திரு ஹேமந்தின் இந்தக் கருத்துகளுக்குச் சமூக ஊடகங்களில் பலர் தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினாலும் இந்தியர்கள் அனைவரும் இப்படி நடந்துகொள்வதில்லை என்றும் அவர்கள் கருத்துரைத்துள்ளனர்.