மலேசியாவின் 16வது மாமன்னராக அரியணை ஏறிய பாகாங் சுல்தான் அப்துல்லா ரியாத்துடின்

மலேசியாவின் 16வது மாமன்னராக அரியணை ஏறிய பாகாங் சுல்தான் அப்துல்லா ரியாத்துடின்

2 mins read
29af60e0-591c-4355-9e57-f8682e3d2d63
மலேசிய மாமன்னராக அரியணை ஏறிய சுல்தான் அப்துல்லா ரியாத்துடினும் அவரது துணைவியார் சுல்தானா அஸிஸா அமினா மய்முனாவும். படம்: இபிஏ -

மலேசியாவின் 16வது மாமன்னராக பாகாங்கைச் சேர்ந்த சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் நேற்று அரியணை ஏறினார். தலைநகர் கோலாலம்பூரில் உள்ள இஸ்தானா நெகாராவில் பாரம்பரிய முறையிலான சடங்கில் அவர் அதிகாரபூர்வமாகப் பதவியில் அமர்ந்தார்.

மலேசியாவின் ஒன்பது மாநிலங்களைச் சேர்ந்த மன்னர்கள், பிரதமர் மகாதீர் முகம்மது, துணைப் பிரதமர் வான் அஸிஸா வான் இஸ்மாயில் உள்ளிட்ட ஏராளமான பிரமுகர்கள் கூடியிருந்த இஸ்தானா நெகாராவில் சுல்தான் அப்துல்லா, 60, பதவிப் பிரமாணத்தை எடுத்துக்கொண்டார். அவருடன் அவரது துணைவி யார் சுல்தானா அஸிஸா அமினா மய்முனாவும் இருந்தார்.

வெளிநாட்டு அரசர்களான புருணை சுல்தான் ஹசனல் போல்கியா, ஐக்கிய அரபு சிற்றரசுகளின் பட்டத்து இளவரசர் ஷேக் முகம்மது உள்ளிட்டவர்களும் அரண்மனையில் இருந்தனர்.

சுல்தான் அப்துல்லா தங்க நூலிழைத்த 'மஸ்காட்' என்றழைக்கப்படும் உடையும் சுல்தானா அஸிஸா வெள்ளை நிற உடையோடு தலை அங்கியும் அணிந்து காணப்பட்டனர்.

அரண்மனைக்கு வெளியே அணிவகுத்து நின்ற மரியாதை காவல் அணியை சுல்தான் அப்துல்லா பின்னர் பார்வையிட்டார்.

ஐந்து ஆண்டு தவணைக் காலத்துக்கு சுல்தான் அப்துல்லா மலேசிய மாமன்னராக பதவி வகிப்பார். நாட்டின் ஒன்பது மாநிலங்களைச் சேர்ந்த மன்னர்கள் மாமன்னரைத் தேர்ந்தெடுப்பர்.

மலேசியாவின் பெர்லிஸ், கெடா, பேராக், சிலாங்கூர், நெகிரி செம்பிலான், ஜோகூர், பாகாங், திரெங்கானு, கிளந்தான் ஆகிய மாநிலங்களை ஆட்சி புரியும் மன்னர்கள் சுழற்சி முறையில் மாமன்னராக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

முந்தைய மாமன்னராக பதவி வகித்த கிளந்தான் சுல்தான் ஐந்தாம் முகம்மது, 49, மலேசிய மக்களை ஆச்சரியப்பட வைக்கும் விதமாக இவ்வாண்டு ஜனவரியில் அரியணை துறந்தார். மாமன்னராக அவர் இரண்டே ஆண்டுகள் நீடித்தார். ரஷ்யாவைச் சேர்ந்த முன்னாள் அழகியை அவர் ரகசியத் திருமணம் புரிந்ததாக பின்னர் செய்திகள் வலம் வந்தன.

ஆனால், திருமணமான ஒரே ஆண்டில் தமது 27 வயது மனைவியை அவர் விவாகரத்து செய்துவிட்டதாக செய்திகள் வெளியாகின. சிங்கப்பூர் வழக்கறிஞர் ஒருவர் அவர்களது விவாகரத்தை உறுதிசெய்தார். அத்தம்பதிக்கு இரண்டு மாத ஆண் குழந்தை உள்ளது.