பிரேசிலில் சிறைக் கைதிகளுக்கு இடையிலான இரு கும்பல்கள் நேற்று முன்தினம் மோதிக்கொண்டதில் குறைந்தது 57 கைதிகள் கொல்லப்பட்டதாக பிரேசில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதோடு, 16 கைதிகளின் தலைகள் துண்டிக்கப்பட்ட கொடூரமும் அரங்கேறியுள்ளது.
பிரேசிலின் வடக்கே உள்ள பாரா மாநிலம், அல்டாமிரா நகர் சிறைச்சாலையில் ரியோ டி ஜெனிரோவைச் சேர்ந்த 'கொமண்டோ வெர்மெலோ' மற்றும் 'கொமண்டோ கிளாஸ் ஏ' என்ற இரு கும்பல்களைச் சேர்ந்தவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர்.
உள்ளூர் நேரப்படி நேற்று முன்தினம் காலை 7 மணியளவில் அந்த இரு கும்பல்களுக்கு இடையே மோதல் வெடித்தது. 'கொமண்டோ வெர்மெலோ' கும்பலைச் சேர்ந்த கைதிகள் அடைக்கப்பட்டிருந்த சிறை அறைகளின் மேற்கூரைக்கு எதிரணி தீவைத்தது. இதைத் தொடர்ந்து கத்திகளை ஏந்திய நிலையில் இரு கும்பல்களும் மோதிக்கொண்டன.
தகவல் அறிந்து அங்கு விரைந்த ராணுவத்தினர், 5 மணி நேர போராட்டத்திற்குப் பின்னர் கலவரத்தைக் கட்டுப்படுத்தினர். இச்சம்பவத்தில் பாதுகாப்பைக் கருதி 50க்கும் மேற்பட்ட கைதிகள் வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டனர்.
சிறை அறைகளுக்குத் தீவைக்கப்பட்ட காரணத்தால்தான் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பதாக அதிகாரிகள் கூறினர். இச்சம்பவத்தில் பாதுகாவல் அதிகாரிகள் இருவர் சிறைபிடிக்கப்பட்டதாகவும் பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
சிறைக் கலவரத்தைப் படமெடுக்கப்பட்ட காணொளி ஒன்று இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. தரையில் ரத்த வெள்ளமாகக் கிடக்கும் துண்டிக்கப்பட்ட தலைகளை உதைத்து கைதிகள் கொண்டாடும் காட்சிகள் அக்காணொளியில் பதிவாகின.
"இது குறிப்பிட்ட கும்பலைக் குறிவைத்து நடத்தப்பட்ட கொடூரச் செயல். ஒரு கும்பல் மற்றொரு கும்பலைப் பழிதீர்க்கவே இந்த வெறிச் செயல் நடத்தப்பட்டது. இது நடக்கும் என்பது குறித்த எந்தவொரு எச்சரிக்கை தகவலும் எங்களுக்குக் கிடைக்கவில்லை," என்று சிறைச்சாலை இயக்குநர் ஜார்பஸ் வாஸ்கொன்சிலோஸ் கூறினார்.
அதிகபட்சம் 200 கைதிகள் மட்டுமே அடைக்கப்பட வேண்டிய சிறைச்சாலையில் 350 பேர் அடைக்கப்பட்டதே வன்முறைக்குக் காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

